இலங்கை

நீதித்துறை மீது கை வைக்க வேண்டாம்; 2029 இல் அரசுக்கு எதிராக களம் இறங்குவோம்! – மனோ தெரிவிப்பு

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, சட்டம் மற்றும் நீதித்துறையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மனோ கணேசன்,

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட நால்வர் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், தற்கொலைகள் குறித்து எம்மால் தீர்க்கமாகக் கூற முடியாது என்றாலும், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பேசப்படுவதாகக் குறிப்பிட்டார்.

நிஷாந்த போன்ற 2.5 பில்லியன் பெறுமதியான நபர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. கபில வந்தபோது என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியதுடன், நீதிமன்றம் இந்த விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பொதுமக்கள் இறுதியாக நம்பிச் செல்லும் இடம் நீதிமன்றமே என்பதால், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படக் கூடாது எனவும், சட்டத்தின் மீதோ, நீதித்துறையின் மீதோ கை வைக்க வேண்டாம் என எச்சரிக்க விரும்புவதாகவும் கூறினார்.

இன்றும் நாட்டில் மதிக்கக்கூடிய நீதிபதிகள் இருக்கிறார்கள், பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம் அந்த கௌரவத்தை சீர்குலைக்க வேண்டாம், அரசாங்கங்கள் வரும், போகும் என்பதால் இதில் அரசியல் செய்யாமல், இப்போதாவது இந்தத் தவறைத் திருத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமாயின், லெனின் மற்றும் மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களைப் படித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் புதிய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசுகையில், தற்போது உருவாக்கப்பட்டுள்ளது ஒரு அரசியல் கூட்டணி அல்ல என்றும், அது நாட்டின் பிரச்சினைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு பொதுவான மேடை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போது இந்த மேடையில் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதோடு, எதிர்காலத்தில் இதில் இணையும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே குரலில் செயற்படுவோம் என்றும் கூறினார்.

நாம் இந்த அரசாங்கத்தைக் குலைக்கப் போவதில்லை, அரசாங்கம் அதன் பயணத்தைத் தொடரட்டும், ஆனால் தேர்தலை நடத்தி இவர்களை வீட்டுக்கு அனுப்ப நாம் தயாராக உள்ளோம் என்று தெரிவித்த அவர், வரும் 2029 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களம் காண்போம் எனத் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழலில் சஜித், நாமல், ரணில் மற்றும் பாட்டலி உள்ளிட்ட 8 ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எமது தரப்பிலிருந்து நிறுத்தப்படும் பொது வேட்பாளர் யாரோ, அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் உறுதிபடக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button