இலங்கை

இரு வாரங்களுக்கு முன் சந்தித்தேன்; இந்த இழப்பை ஏற்க முடியவில்லை – விக்ரமரத்ன குறித்து மைத்திரிபால உருக்கம்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் திடீர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

சந்தன விக்ரமரத்ன தமக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், தாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரை பொலிஸ்மா அதிபராக நியமித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்தார். அவர் மிகவும் நேர்மையான, வெளிப்படையான, கடமையுணர்வும் நற்பண்பும் கொண்ட அதிகாரி எனவும் பாராட்டினார்.

பல்வேறு அரசியல் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் பதற்றமான சூழல்களிலும், குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற காலங்களிலும், எவருடனும் பகைமை கொள்ளாமல் அமைதியாகவும் பொறுப்புடனும் செயல்பட்டவர் சந்தன விக்ரமரத்ன என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர், தாமும் சந்தன விக்ரமரத்னவும் மற்றொரு நண்பருமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார். அப்போது தனது வீட்டிற்கும் வர வேண்டும் என சந்தன விக்ரமரத்ன கூறியிருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். WorldNews

அரசியலைத் தாண்டி சமய மற்றும் தேசிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடிய நிலையில், இவ்வாறு அவரின் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன ஆழ்ந்த கவலை வெளியிட்டார்.

சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தற்போது எதையும் கூற முடியாது என்றும், விசாரணைகளின் மூலம் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சந்தன விக்ரமரத்ன போன்ற பெறுமதிமிக்க அதிகாரிகள் பொலிஸ் துறைக்கு மட்டுமன்றி அனைத்து அரச சேவைத் துறைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் என்றும், இத்தகைய நேர்மையான அதிகாரிகள் நாட்டிற்கு மிகவும் அவசியமானவர்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button