உலகம்

இந்தியாவில் பருவமழை கோரத்தாண்டவம்; வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனர்த்தங்களினால் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 8 பேரும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 11 பேரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜௌரி (Rajouri) பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் காரணமாகப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய இராணுவ வீரர்களும், மாநில அவசரகால மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ரஜௌரி மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தில் தத்தளித்த 5 சிறுவர்கள் உட்பட 11 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதேவேளை, நாகலாந்தின் மோன் (Mon) மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பிரசித்தி பெற்ற அமர்நாத் (Amarnath Yatra) மற்றும் வைஷ்ணோ தேவி (Vaishno Devi) ஆலயங்களுக்கான வருடாந்த புனித யாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

நிலமை சீரடையும் வரை பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button