பலதும் பத்தும்

பயனர்களின் கோப்புகளை ChatGPT அனுமதியின்றி நீக்கியதா?

பயனர்களின் கோப்புகளை ChatGPT அனுமதியின்றி தவறுதலாக நீக்கியதாகப் பல பயனர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதனை OpenAI நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கையோ அல்லது அனுமதியோ இன்றி கோப்புகள் நீக்கப்படுவதாகப் பயனர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் புகார் தெரிவித்தனர்.

மென்பொருள் பொறியாளர் புருனோ லெமோஸ், “GPT-5.6 Sol எனது முழு உற்பத்தி தரவுத்தளத்தையும் (Production database) நீக்கிவிட்டது. இது நகைச்சுவையல்ல” என ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

AI முதலீட்டாளர் மேட் ஷூமர், தனது மேக் (Mac) கணினியில் இருந்த கிட்டத்தட்ட அனைத்துக் கோப்புகளையும் இந்தத் கருவி தவறுதலாக நீக்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சிக்கல் ‘கோடெக்ஸ்’ (Codex) இயங்குதளத்திற்கு ஆதாரமாக விளங்கும் புதிய மாடலான ‘GPT-5.6 Sol’ உடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. இந்த மாடல் சில நேரங்களில் அபாயகரமான தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடும் என நிறுவனம் முன்பே எச்சரித்திருந்தது.

OpenAI-யின் தயாரிப்புத் தலைவர்களில் ஒருவரான திபோ சோட்டியாக்ஸ் (Thibault Sottiaux) இந்தச் சிக்கலை உறுதிப்படுத்தியுள்ளார். பயனர்கள் பாதுகாப்பு அம்சங்களை (Safety safeguards) முடக்காமல், கணினிக்கு முழு அணுகலை (Full access) வழங்கும்போது இத்தகைய ‘தவறுதலான செயல்கள்’ நிகழ்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்துத் தனது ‘X’ பதிவில் திபோ சோட்டியாக்ஸ் மேலும் கூறுகையில்:

“இந்தச் செயல்பாடு நிச்சயமாக நாங்கள் விரும்பும் ஒன்றல்ல. உயர் அபாயகரமான செயல்களைத் தடுக்கும் ‘சாண்ட்பாக்ஸ்’ (Sandbox) பாதுகாப்பு அல்லது ‘தானியங்கி மறுஆய்வு’ (Auto review) வசதிகளைப் பயன்படுத்தாதபோது இது நிகழ்கிறது”.

“டெவலப்பர் செய்திகளைப் புதுப்பித்தல், பாதுகாப்பான அணுகல் முறைகளைப் பயனர்களுக்குப் பரிந்துரைத்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்தச் சம்பவங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன என்றாலும், இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை விரைவில் வெளியிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button