ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசவுள்ள ஆறு கட்சிக் கூட்டு; சுமந்திரன் தெரிவிப்பு

எங்கள் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து விளக்கங்களை அளிக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள தளத்தை – இந்த மேடையை – நாம் எதற்காகப் பயன்படுத்தப் போகிறோம்?
எங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவதற்காக அல்ல. நாம் இணங்குகின்ற விஷயங்களைச் சேர்ந்து சொல்வது என்பதுதான் இதிலுள்ள முக்கிய கருப்பொருள் ஆகும்.நாட்டின் சனத்தொகையிலே குறைந்தபட்சம் 25 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு வலிமை கூடுதலாக இருக்கும். ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்று சொல்வதைப் போல, நாம் இணங்குகின்ற விஷயங்களுக்காக இணைந்து குரலெழுப்புவது முக்கியமானது.
அதிலே, மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதும், அதேபோல அதிஉச்ச அதிகாரப் பகிர்வுடைய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதும், எங்களுடைய மக்களுக்கு வெவ்வேறாக இருக்கின்ற காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் நாம் முதன்மையாக முன்னிறுத்தியிருக்கிறோம்.
இந்த விடயங்களை விளக்குவதற்காக, கொழும்பில் இருக்கக்கூடிய பல்வேறு நாட்டு ராஜதந்திரிகளை – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ராஜதந்திரிகளைச் சந்தித்து, அவர்களுக்கு இந்த விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, அந்த ஆறு கட்சிகளின் தளத்திற்கு நான் எடுத்துச் சொல்வேன். அந்த விடயங்களையும் நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
![]()