இலங்கை

நெடுந்தீவுக் கடலில் இந்திய மீனவர்கள் அட்டகாசம் ; இரண்டு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வலைகள்,கடலுணவுகள் அபகரிப்பு!

பாரிய இழுவைமடிப் படகில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவர்கள் நாற்பது வரையான சிறிய ரகப் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளைச் சேதமாக்கி சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மீன்பிடி வலைகளையும், கடலுணவுகளையும் அள்ளிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவுக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் காரைக்கால் என்று பெயர் பொறிக்கப்பட்ட இழுவைமடிப் படகு,இந்தக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறியரகப் படகுகளை மோதிச் சேதப்படுத்தியதுடன் மீன்பிடி வலைகள், கடலுணவுகளையும் அள்ளிக் கொண்டு அங்கிருந்து வேகமாகத் தப்பியோடியுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் நெடுந்தீவிலிருந்து 20 இற்கும் மேற்பட்ட படகுகளிலும், நயினாதீவிலிருந்து 10 இற்கும் மேற்பட்ட படகுகளிலும், புங்குடுதீவிலிருந்து 07 படகுகளிலும் சென்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் அறுபது லட்சம் ரூபா பெறுமதிமிக்க மீன்பிடி வலைகளைத் தாங்கள் மாத்திரம் பறிகொடுத்துள்ளதாகப் புங்குடுதீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த மீனவரொருவர் கூறுகையில்,

‘கடந்த மாதம் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ஏழு லட்சம் ரூபாவுக்குப் புதிய மீன்பிடி வலைகளை வாங்கித் தொழில் செய்து வந்தேன். ஒரேநாளில் அவற்றைப் பறிகொடுக்க நேர்ந்துள்ளது. தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’ என தனது மனக் குமுறலைப் பெரும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் அத்துமீறி நெடுந்தீவுக் கடற்பரப்பில் அராஜகம் புரிந்த போது சம்பவம் நடந்த பகுதிக்கு அண்மையில் இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், எனினும், உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கண்டும் காணாமலிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button