இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் மரணம் தற்செயலான துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதா?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, வெள்ளிக்கிழமை மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாக அதிர்ச்சியளிக்கும் வகையில் மரணமடைந்தமை, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் (PSO) பிஸ்டல் தற்செயலாக(accidental discharge) இயங்கியதால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

நடைப்பயிற்சிக்குத் தயாராகி, தனது மனைவியுடன் இணைவதற்காக விறாந்தையில் காத்திருந்த விக்ரமரத்ன, பாதுகாப்பு அதிகாரியின் புதிய துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ‘சண்டே ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

வீட்டின் உள்ளே காலணிகளை அணிந்து கொண்டிருந்த அவரது மனைவி, திடீரென ஒரு சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, கணவன் விக்ரமரத்ன விறாந்தையில் விழுந்து கிடப்பதைக் கண்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அதிகாரி ஒரு புதிய துப்பாக்கியை வைத்திருப்பதை அவதானித்து, அதனைப் பரிசோதிக்கக் கேட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு தான் இதேபோன்ற ஒரு துப்பாக்கியை பயன்படுத்தியதாகக் கூறிய அவர், அதில் மகசின் (தோட்டாப் பெட்டி) இல்லாததைக் கண்டு, “மகசின் இல்லாத பிஸ்டலுடன் என்னுடன் நடைப்பயிற்சிக்கு வரத் திட்டமிடுகிறாயா?” என்று கேட்டுள்ளார்.

அதன்பின்னர், பாதுகாப்பு அதிகாரி தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மகசினை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் கேட்ட தண்ணீர் போத்தலை எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் சென்றபோதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விக்ரமரத்ன எந்த வகையிலும் மனச்சோர்வடையவில்லை என்றும், சில நாட்களுக்கு முன்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, நண்பர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு உரையாடினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சனிக்கிழமையன்று ஒரு நண்பரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது.

விக்ரமரத்ன தற்கொலை செய்து கொள்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் தெரிவித்ததுடன், வெளிநபர் எவராவது அவரைச் சுட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விக்ரமரத்ன நவம்பர் 25, 2020 அன்று 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு, மூன்று வருடங்களின் பின்னர் 2023 இல் ஓய்வு பெற்றார். அவரது முன்னோடியான பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதை அடுத்து, மே 2019 இல் அந்தப் பதவிக்கு பெயரிடப்பட்டதிலிருந்து, மிக நீண்ட காலம் தற்காலிக பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button