முச்சந்தி

டெல்லியில் பரபரப்பு: 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் சேர்ப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20-ம் திகதி கூட உள்ளதை முன்னிட்டு அன்றைய தினம், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை சோனம் வாங்சுக்கை டெல்லி பொலிஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி டெல்லி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், “டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்ல வலியுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button