பலதும் பத்தும்

60 ஆண்டுகால கணக்கைத் தீர்க்கப் போவது யார்?; உலகக் கிண்ண மகுடம் சூடப்போவது யார்?

2026 உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு மகத்தான வரலாற்று சம்பவம் நடக்க உள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டின் யூரோ கிண்ண சம்பியனான ஸ்பெயின் மற்றும் 2024 கோபா அமெரிக்கா சம்பியனான ஆர்ஜென்ரீனா ஆகிய இரு அணிகளும், 2026 ஃபிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் மோதவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை உலக கிண்ண இறுதியாட்டத்தில் சந்தித்தது கிடையாது. 1966ஆம் அண்டு ஃபிபா உலக கிண்ண லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதி இருந்தன. அதில், ஆர்ஜென்ரீனா 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது. சரியாக 60 வருடத்திற்குப் பின் 2ஆவது தடவையும் முதல் தடவையாக இறுதியாட்டத்திலும் மோதவுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த இரு அணிகளின் வெற்றிகள், உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதைய ஐரோப்பிய சம்பியனும், கோபா அமெரிக்கா சம்பியனும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சூழலை உருவாக்கியுள்ளன. இதற்கு முன்னதாக ஃபிபா உலகக் கிண்ண வரலாற்றில் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் தற்போதைய சம்பியன் அணிகள் இறுதிப் போட்டியில் மோதியதே இல்லை. இன்று 9 ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் இந்த புதிய வரலாறு உருவாக உள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தில் ஸ்பெயின் அணி தனது நேர்த்தியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தொடரிலும் ஸ்பெயின் அணி தனக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் அணி தனது உலகக் கிண்ண பயணத்தை எச் பிரிவில் தொடங்கியது. ஜூன் 15 அன்று கேப் வெர்டேவுக்கு எதிரான முதல் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து ஜூன் 21 அன்று சவுதி அரேபியாவை 4-0 என்ற கணக்கிலும், ஜூன் 26 அன்று உருகுவேவை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. பின்னர் ஜூலை 2 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32-வது சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 என்ற கணக்கிலும், ஜூலை 6 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஒப் 16 சுற்றில் போர்த்துகலை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.

அதைத்தொடர்ந்து ஜூலை 10 காலிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை 2-1 என்ற கணக்கிலும், ஜூலை 14 அன்று நடைபெற்ற அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறம், ஆர்ஜென்ரீனா அணி இந்த தொடரில் நூறு சதவீத வெற்றி சாதனையை தன்வசம் வைத்துள்ளது. விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்த அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களம் இறங்குகிறது.

ஜே பிரிவில் களமிறங்கிய ஆர்ஜென்ரீனா அணி, ஜூன் 16 அன்று அல்ஜீரியாவை 3-0 என்ற கணக்கிலும், ஜூன் 22 அன்று ஆஸ்திரியாவை 2-0 என்ற கணக்கிலும், ஜூன் 27 அன்று ஜோர்டானை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. பின்னர் ஜூலை 3 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஒப் 32 சுற்றில் கேப் வெர்டேவை 3-2 என்ற கணக்கிலும், ஜூலை 7 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் எகிப்தை 3-2 என்ற கணக்கிலும் போராடி வென்றது. அதற்கடுத்து ஜூலை 11 அன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சுவிற்சர்லாந்தை 3-1 என்ற கணக்கிலும், ஜூலை 15 அன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஸ்பெயின் அணி இந்த உலகக் கிண்ணத்தில் மிகக் குறைந்த கோல்களை, வெறும் ஒரே ஒரு கோல் மட்டுமே எதிரணியை அடிக்கவிட்ட நிலையில், ஆர்ஜென்ரீனா அணி மிக அதிகமாக 19 கோல்கள் அடித்து, அதிக கோல்களை அடித்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.இந்த தொடரில் ஆர்ஜென்ரீனா அடித்த 19 கோல்களில், 8 கோல்களை கப்டன் லியோனல் மெஸ்ஸி மட்டுமே அடித்துள்ளார். இதுதவிர, 4 கோல்கள் அடிப்பதற்கும் அவர் உதவி செய்துள்ளார். இதில் இரண்டு உதவிகள் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button