இலங்கை

சலே தாக்கல் செய்த ரிட் மனு: ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன மீது பாரிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், சஹ்ரான் ஹஸீம் மற்றும் அவரது குழுவினர் தொடர்பில் தெளிவான தகவல்கள் அரச உளவுச் சேவை ஊடாக வழங்கப்பட்டும், அவற்றை அடிப்படைவாத சம்பவங்கள் குறித்து (மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு, வனாத்துவில்லு வெடிபொருள் மீட்பு) விசாரணை செய்த சி.ஐ.டி.யின் குழுவினருக்கு, சி.ஐ.டி.யின் அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் வழங்கியிருக்கவில்லை என மேன் முறையீட்டு நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (14) தெரிவிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்ததை எதிர்த்து, அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு, செவ்வாய்க்கிழமை (14) மேண்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.

இதன்போதே மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்ப்ட்டது.

மனுவில் பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர, விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குனவர்தன, பொது மக்கல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, அருட் தந்தை ரொஹான் சில்வா மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (14) முர்பகல் 5 ஆவது தவணையிலும் மனுதாரர் தரப்பு வாடங்களே முன்வைக்கப்ப்ட்டன. அதன்படி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன பின்வருமாறு வாதங்களை முன்வைத்தார்.

‘ உயிர்த்த‌ ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை விசாரித்த ஜனக் டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கைகளின்படி, சஹாரன் ஹஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவாளர்கள் கண்டி எசல பெரஹேராவைத் தாக்குவதே முதன்மை இலக்காக இருந்த்துள்லது என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில், அவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களைத் தாக்கத் திட்டமிடவில்லை. அவர்கள் கண்டி பெரஹேராவைத் தாக்கி, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், மாவனெல்லை புத்தர் சிலைகள் மீதான தாக்குதலை விசாரித்து வந்த பொலிஸ் குழுக்கள், வனத்தவில்லுவ பகுதியில் சஹாரன் ஹஷிம் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஒரு பாதுகாப்பான முகாமில் திடீர் சோதனை நடத்தினர். அந்த முகாமில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் மூலம், தனது திட்டங்கள் அனைத்தும் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் கைகளில் சிக்கிவிட்டதை சஹாரன் ஹஷிம் உணர்ந்தார். அதன்படி, அவர் தனது தாக்குதலைத் துரிதப்படுத்த முடிவு செய்தார். அதன்படி, அவர்கள் உயிர்த்த தாக்குதலை நடத்தத் தீர்மானித்தனர்.

வனாத்துவில்லுவ பகுதியில் சஹாரன் ஹஷிமின் குழுவினரின் முகாம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த சி.ஐ.டி. பொலிஸ் குழுவின் தலைமை அதிகாரி பொலிச் பரிசோதகர் மராசிங்க, ஜனக் டி சில்வா ஆணைக்குழுவிடம் ஒரு வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த வாக்குமூலத்தின்படி, இந்த விசாரணைக்காக ஷானி அபேசேகரவால் ஐந்து அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் எழுநூறு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், இந்த முக்கியமான விசாரணைக்கு ஐந்து அதிகாரிகள் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தனர்.

2019, ஏப்ரல் 9 அன்று அனுப்பட்ட‌ ஓர் அறிக்கை, சஹாரன் ஹஷிமும் அவரது ஆதரவாளர்களும் இலங்கையில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தது. 2019, ஏப்ரல் 20 அன்று அனுப்பட்ட அறிக்கை, சஹாரன் ஹாஷிம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பதுங்கியிருந்த இடங்கள் குறித்த தகவல்களை வழங்கியிருந்தது. இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில், ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்தார். ஷானி அபேசேகர அதன் பணிப்பாளராக இருந்தார். சஹாரன் ஹஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் குறித்து இவ்வளவு தகவல்களை வழங்கியிருந்தபோதிலும், அதைத் தடுக்க ரவி செனவிரத்னவும் ஷானி அபேசேகரவும் என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்? இதுபோன்று பொறுப்பற்ற முறையில் செயல்பட்டவர்கள் எனது சேவை பெறுநரை எப்படி விசாரிக்க முடியும்?

2019 ஜனவரி 25 முதல் 2019 ஏப்ரல் 20 வரையிலான காலகட்டத்தில், அப்போதைய அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சஹாரன் ஹஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அனுப்பியுள்ளார் என்பது சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பட்ட அந்த அத்தனை உளவுத் தகவல்கலும் சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ரவி செனவிரத்னவுக்கு பிரதியிடப்ப்ட்டுள்ளன. 2019 ஜனவரி 25, மார்ச் 01 மற்றும் மார்ச் 21 ஆகிய திகதிகளில் நிலந்த ஜயவர்தனவால் அனுப்பப்பட்ட அறிக்கைகளில், சஹாரன் ஹாஷிம் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வாறு தயாராகி வருகிறார் என்பது குறித்தும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 2019 மார்ச் 30 அன்று அனுப்பட்ட அறிக்கையில் சஹாரன் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கைது செய்யும் பொருட்டு, அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களை விவரிக்கும் ஓர் அறிக்கையை நிலந்த ஜயவர்தன சமர்ப்பித்திருந்தார்.

மாவனெல்லை புத்தர் சிலைகள் தகர்ப்பு விவகார விசாரணைகளின் போது, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பு இருப்பதாக விசாரணைக் குழுக்கள் வெளிப்படுத்தியிருந்தன. எனவே, இவ்விட‌யம் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு இன்டர்போலின் உதவியைப் பெறுமாறு விசாரணை அதிகாரிகள் கோரியிருந்தனர். இருப்பினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அந்தக் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. அவற்றை நிராகரித்து அவர் அலட்சியமாகச் செயல்பட்டார். பொலிஸ் பஎஇசோதகர் மராசிங்க, ஜனக் டி சில்வா ஆணைக்குழுவிடம் அளித்த தனது வாக்கு மூலத்தில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் FBI, ஆஸ்திரேலியாவின் CID, ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் மற்றும் இந்தியாவின் ரோ உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்தியதாகத் தெளிவாகக் கூறியிருந்தார். இருப்பினும், ஆணைக்குழுவால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், மராசிங்க என்ற அந்த அதிகாரி, அந்த வெளிநாட்டு விசாரணைக் குழுக்களால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். அந்த‌ நடவடிக்கைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. அந்த அறிக்கைகள் எனக்குக் கிடைக்கவில்லை என்று மராசிங்க என்ற அதிகாரி ஆணைக்குழுவின் முன் தெரிவித்திருந்தார். விசாரணைகளை நடத்திய அதிகாரிகளிடம் இந்த விசாரணை அறிக்கைகள் ஏன் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவில்லை? அந்த விசாரணை அறிக்கைகளில் என்ன இருந்தது? இது ஒரு மிகப் பெரும் கேள்வி.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க, அமெரிக்காவைச் சேர்ந்த FBI புலனாய்வாளர்கள் இலங்கைக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து, நௌபர் மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக நாட்டின் நீதிமன்றங்களில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக FBI புலனாய்வாளர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு சத்தியக் கடதாசியை அளித்திருந்தார். உயிர்த்த தாக்குதல்களின் சூத்திரதாரி “ஸஹ்ரான் ஹஷிம்” என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கலத்தில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் டயஸ் பத்மசிறி என்ற அதிகாரியும் இது தொடர்பாக ஒரு வாக்குமூலம் அளித்திருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்கலத்தின் உயர் அதிகாரிகளிடமிருந்து, ஸஹ்ரான் ஹஷிம் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து தனக்கு எந்த உளவுத் தகவல்களும் கிடைக்கவில்லை என்று அவர் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அண்மையில் பிரான்ஸ் சென்று, அசாத் மௌலானாவை இலங்கைத் தூதரகத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றார். அசாத் மௌலானா பல குற்றங்களுக்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஆவார். அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, அவர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார். அவரை கைது செய்யவில்லை.

பொறுப்புவாய்ந்த பல வெளிநாட்டு விசாரணை நிறுவங்கள் சஹ்ரானே பிரதான சூத்திரதாரி என்று கூறும் நிலையில், அதனை கருத்தில் கொள்ளாது, பிடியாயாணை பிறப்பிக்கப்பட்ட பல்வேறு குற‌றங்களுடன் தொடர்புபட்ட அசாத் மெளலானாவின் சாட்சியத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொண்டு எனது சேவை பெறுநருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளமை நியாயமற்றது. ‘ என ஜனாதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன குறிப்பிட்டார்.

இதனையடுத்து இந்த எழுத்தாணை மனு தொடர்பில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 8 இடையீட்டு மனுக்கள் தொடர்பிலும் இடையீட்டு மனுக்கள் தொடர்பிலும் தனது அடிப்படை ஆட்சேபனத்தை பதிவு செய்வதாக பிரதிவாதிகளுக்காக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தும், சட்டத்தரணி சுரேன் டி பெரேராவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து இம்மனு மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்ப்ட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button