இலங்கை

தவறுகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதே அரசியல் நாகரிகம் ; 1988 சம்பவங்களை சுட்டிக்காட்டி ரணில் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலேயே, பொறுப்புக்கூறல்களுடன் செயல்பட்டுள்ளது. நீர்கொழும்பு சம்பவத்தின் போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் அதிகாரிகளுக்கு இருந்தது. இருப்பினும் இது குறித்து ஏன் அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை  சந்தித்து கலந்துரையாடும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 1988ஆம் ஆண்டில் நீதியமைச்சராக நிஸ்சங்க விஜேரத்ன பதவி வகித்தார். அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த வேளையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அதுமட்டுமன்றி, அவருடைய பிரதி அமைச்சராக இருந்த ஷெல்டன் ரணராஜாவும் இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியைத் துறந்தார். அதன் பின்னரே, நீதியமைச்சின் தற்காலிகப் பொறுப்பு போல் பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1988 ஜனாதிபதித் தேர்தல் கால நினைவுகளையும், அப்போதைய அரசியல் ஒழுக்கமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். 1988 தேர்தலில், தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கும் எவராக இருந்தாலும், அவர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச ஒரு கடுமையான விதியை அறிவித்திருந்தார். அதன்படி, கடுவெல தொகுதியில் போட்டியிட்டு போல் பெரேரா தோல்வியடைந்தார். அவர் உடனடியாகப் பதவியை துறந்தார்.

அதனைத் தொடர்ந்தே தற்காலிக நீதியமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன். தேர்தல் முழுமையாக முடிவடைந்த பின்னர் புதிய நீதியமைச்சராக வில்சன் பெரேரா நியமிக்கப்பட்டார். இவ்வரலாறுகள் அனைத்தும், ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக எவ்வளவு நாகரிகமான முறையில் பொறுப்புக்கூறல்களுடன் செயல்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

நீர்கொழும்பு சம்பவத்தின் போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் அதிகாரிகளுக்கு இருந்தது. ஏன் இது குறித்து அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை? இந்தச் சம்பவத்திற்கு அமைச்சரைப் போலவே அவரது செயலாளரும் சமமாகப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button