இப்படியும் சொல்லலாம்… கவிதை… முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

அன்று
பல மணி நேரமாக
மொழியால் கரைந்தேன்
அவள் மெளனத்தை மட்டும்
உதிர்த்துவிட்டு சென்றாள்
அன்றிரவு
மொட்டைமாடியில் தூக்கம் துயிலாமல்
வானில் தெரிந்த நட்சத்திரங்களை ஆராய்ந்தேன்.
சொல்லில் அடங்காததை
மின்னி மின்னி உரைத்தன
மறுநாள்
அவளை எதிர்கொண்டபோது
மென்மையாக சிரித்துச் சென்றாள்
இரவில் மின்னிய நட்சத்திரங்கள்
சொல்லியது இதுதானா? என்று
நினைவிற்குள் வந்து விழுந்தது.
2. சுவடு பதித்தல்…
மீண்டும் அந்த நாளுக்காக!…
சைவசபைக் கூட்டத்திற்கு
மாலை ஐந்து மணிக்கு வந்துவிடு
என உத்தரவு போட்டவள்
தாமதமாகத்தான்
அவதாரம் தந்தாள்.
தலை நிறைய மல்லிகை சூடியவள்
ஏதோ முதலிரவுக்கு ஒத்திகைப்
பார்ப்பதுபோல் அருகில் வந்து
மாலைப் பொழுதை மயக்கினாள்.
கூட்டம் ஒருபக்கம் நடக்க
மறுபக்கம்
சொற்களின் விளையாட்டு
புதிர்போட தொடங்கியது.
எனக்காக ஒரு கவிதை
எழுதிக்கொடு என கூந்தல்
பின்னலை முன் பக்கம்
போட்டுக்கொண்டு சவால்
விட்டவளுக்கு
நான் எழுதப்போகும்
கவிதையைத்தான்
எப்போதோ
அவளின் கூந்தல் மணம்
ஆரவாரமில்லாமல்
கற்பழித்து விட்டதென்று
சொன்னதும்
யாரும் பார்க்கிறார்களாவென
விழிகளை உலவ விட்டு
கன்னத்தில் இறுக்கமாக
தேனிதழை சுவடு பதித்தாள்…

![]()