யாழ் போதனா வைத்தியசாலையில் மீண்டும் இரத்தத்துக்குப் பெரும் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இரத்தவகை இருப்பு 330 பைந்துகள் ஆகும். ஆனால், எமது இரத்த வங்கியில் 192 பைந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இது எமது இரத்த வங்கியைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தானதும், கவலைக்கிடமானதுமான நிலையாகும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்துத் தரப்பினரும் குருதிக் கொடை வழங்க முன்வர வேண்டுமெனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொடர்ச்சியாகக் இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டாலும் நோயாளர்களுக்கான குருதி விநியோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேவையான குருதி இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில குருதிக் கொடை முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதும் இந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இவ்வாறான அவசரச் சூழ்நிலைகளில் பொதுவாக இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்று மாபெரும் இரத்ததான முகாம்கள் நடத்துவது வழக்கமாகும். எனினும், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடைசி மாபெரும் இரத்ததான முகாம் கடந்த மார்ச் மாதம்- 21 ஆம் திகதி நடைபெற்றமையால் நான்கு மாதங்கள் பூர்த்தியாகாத காரணத்தால் தற்போது அவர்களாலும் மீண்டும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்ய இயலாத நிலை உள்ளது. எமது மருத்துவமனைப் பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த ஏப்ரல்-07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெற்றமையால் அவர்களும் இன்னும் நான்கு மாதங்களைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் அவர்களிடமும் உடனடியாக உதவி கோர முடியாதுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நோயாளர்களுக்குத் தேவையான இரத்தத்தை வழங்குவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் குழுவாகவோ அல்லது தனித் தனியாகவோ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிக்குத் தினமும் காலை-08 மணி முதல் மாலை-04 மணி வரை விக்டோரியா வீதியில் அமைந்துள்ள 12 ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்களைக் காக்கும் இந்த உன்னத மனிதாபிமானப் பணிக்கு உதவுமாறு கேட்டுள்ளனர்.
![]()