சஜித் கேள்வி எழுப்ப மீண்டும் தடையா?; எதிர்க்கட்சியினரின் வாய்களை மூட முயற்சியா?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி கேட்க தடை வித்திட்ட அரசாங்கம் தற்போது விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பிலும் கேள்வி கேட்கத் தடை விதித்துள்ளது. கடந்த அரசாங்கம் செயற்பட்ட அதே முறையிலேயே தற்போதைய அரசாங்கமும் நிலையியற் கட்டளைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, கருத்துக்களை முன்வைக்கத் தடை விதிப்பது ஜனநாயக விரோதச் செயலாகும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துறைசார் குழுவில் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறுத்தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் பேசுகையில்,
சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் குழு வெள்ளிக்கிழமை கூடிய சமயம், நெல் கொள்வனவு மற்றும் நாட்டின் அரிசித் தேவை குறித்து கலந்துரையாடப்படவிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தம்மால் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானிப்பாளராக கலந்துகொள்ள முடியும். இருந்த போதிலும், கருத்துக்களை வெளியிட முடியாது என இதன் தலைவர் ஹெக்டர் அப்புஹாமிக்கு தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது
பல சந்தர்ப்பங்களில் இக்குழுவில் கலந்து கொண்டது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அல்ல, மாறாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கே கலந்து கொண்டேன். நீண்டகாலமாக விவசாய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் போன்ற விடயங்கள் குறித்து தாம் தெளிவுபடுத்தியுள்ளோம். இப்பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் வாய்களை மூடுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சியானது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். இது பாரதூரமானதொரு நிலை
கடந்த அரசாங்கத்தின் நிதி பற்றிய குழுவில் 2023 ஜூன் 29 ஆம் திகதி கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில், அக்குழுவில் கலந்து கொள்வதை நிராகரித்து, வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தி எனது பங்களிப்பைத் தடுத்தனர். கடந்த அரசாங்கம் செயற்பட்ட அதே முறையிலேயே தற்போதைய அரசாங்கமும் நிலையியற் கட்டளைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, விவசாயிகளுக்காக முன்வைக்கவிருந்த கருத்துக்களை முன்வைக்கத் தடை விதிப்பது ஜனநாயக விரோதச் செயலாகும்
கடந்த ஜூன் 8 ஆம் திகதி புதன்கிழமை விவசாய அமைப்புகளினது பிரதிநிதிகள் குழுவொன்று என்னைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர். அந்த சந்தர்ப்பம் வரை நெல்லுக்கான உத்தரவாத விலை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்னர், நெல் சந்தைப்படுத்தல் சபை சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக நெல்லுக்கான உத்தரவாத விலையை பிரகடனப்படுத்தியது. “இச்சுற்றறிக்கையின்படி, அதிகபட்ச ஈரப்பதம் 14% என்ற விகிதத்திற்குள் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, நாட்டரிசி ரூ. 120 க்கும், சம்பா ரூ. 130 க்கும், கீரி சம்பா ரூ. 140 க்கும் என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அன்று பாராளுமன்றத்தில் இவ்விடயங்களை முன்வைக்கும் வரை வர்த்தமானியை வெளியிடாத அரசாங்கம், இன்று எதிர்க்கட்சியினரின் வாய்களை மூட முயற்சிக்கிறது
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 137 செலவாவதாக விவசாய அமைச்சர் பிரஸ்தாபித்திருந்தார். அவ்வாறான கூற்றுக்களைக் கூறிக்கொண்டு குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றன. இவை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக, நெல்லுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய நியாயமான நிலையான விலைக்காக எம்மால் முன்னெடுக்க முடியுமான போராட்டத்தை நாம் முன்னெடுப்போம்.
இந்த அரசாங்கம் தங்களை ஆட்சிக்குக் கொண்டுவந்த விவசாயிகளுக்கே துரோகம் இழைத்து விட்டது. . இவர்கள் விவசாயியின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர். அன்று நெற் பயிர்களை அறுவடை செய்யும் போது ரூ. 150 உத்தரவாத விலையை சட்டமாக்கித் தருவோம் என முழங்கினர். இன்று நடந்தது ஒன்றுமில்லை. எதிர்க்கட்சியின் குரலை துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குள் ஒடுக்கினாலும், விவசாயிகளுக்காப் நாம் குரல் கொடுத்துப் பேசுவதை யாராலும் நிறுத்த முடியாது. பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் இவ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றுமே முன்னிற்கும் என்றார்.
![]()