இந்தியா

புதுவையில் தவெக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ரங்கசாமி திட்டம்?

புதுவையில் 2021 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஏற்பட்டது.

இந்த கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றது. அவ்வப்போது கூட்டணியில் இடம்பெற்ற என்ஆர்.காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் மோதல் ஏற்பட்டது.

ஆனாலும் ஒருவரை ஒருவர் குறை கூறியபடியே 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தனர். 2026 தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்தது.

தமிழகத்தில் தவெக கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்தார். இதனால் என்ஆர்.காங்கிரஸ், தவெக கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்தார்.

கடந்த முறைபோல தொகுதியை பங்கீடு செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். ஆனால் இந்த தேர்தல் என்.ஆர்.காங்கிரசுக்கு ஏறுமுகமாக அமைந்தது. தேர்தலில் 16 தொகுதியில் போட்டியிட்ட என்ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளை கைப்பற்றியது.

கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி கூடுதலாக 10 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. தேர்தலின்போதே இரு கட்சிகளுக்கும் இடையே சில மனக்குமுறல்களும் ஏற்பட்டது.

என்ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி, பாஜக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யவில்லை. அதேநேரத்தில் பாஜக தரப்பில் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க சுயேச்சைகளுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதனால் தேர்தல் முடிந்து கூட்டணி ஆட்சி அமைந்து, முதலமைச்சர், அமைச்சர் பொறுப்பேற்றாலும், இன்று வரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த துறைகளையும் முதலமைச்சர் ரங்கசாமியே நிர்வகித்து வருகிறார்.

சபாநாயகர் பதவியை பெற பாஜக முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி அளித்தது. கடந்த முறையை விட பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்ததால், துணை சபாநாயகர் பதவியை பெற்றுக்கொள்ளும்படி ரங்கசாமி அறிவுறுத்தினார்.

இதை பாஜக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இதுவரை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

தேர்தல் முடிவு வெளியாகி 2 மாதமாகியும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக மோதல் முற்றுப் பெறவில்லை. இருதரப்பிலும் பிடிவாதம் தொடர்கிறது.

கடந்த முறை ரங்கசாமிக்கு ஆட்சி அமைக்க வேறு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை தவெக கூட்டணி 3 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது என்ஆர்.காங்கிரசுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு தொகுதியை இராஜினாமா செய்துவிட்டார். இதனால் சட்டசபையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. இதில் ஆட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால்போதும்.

இதன்படி பாஜக ஆதரவு இல்லாமல், என்ஆர்.காங்கிரசால் ஆட்சியமைக்க முடியும். ஏனெனில் என்ஆர்.காங்கிரசுக்கு 11, தவெக கூட்டணி 3, அதிமுக 1, சுயேச்சைகள் 2 என 17 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும்.

இதனால் பாஜகவுடன் மோதல் முடிவுக்கு வராவிட்டால், மாற்று ஏற்பாடாக தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் புதுவை அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button