இலங்கை

கேப்பாப்புலவு காணி விடுவிப்புக்கு ஆதரவாக நாளைய மாபெரும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

கேப்பாப்புலவில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் பூர்வீக காணிகளை விடுவிக்க நாளையதினம் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பேதங்களை கடந்து ஆதரவு வழங்க வேண்டும் என முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன் தெரிவித்துள்ளார்.

அவரால்  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர் மக்களுக்கு சொந்தமான பல பூர்வீக காணிகள் யுத்த காலத்தின் பின்னர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அந்தக் காணிகள் முழுமையாக உரிய மக்களிடம் மீள ஒப்படைக்கப்படாதது மிகுந்த கவலையளிக்கும் விடயமாகும்.

தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த மக்கள் பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழியில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது சொந்த நிலங்களில் வாழவும், விவசாயம் மற்றும் ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாத நிலையில் அவர்கள் இன்னமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கேப்பாபிலவு மக்களின் பூர்வீக காணிகள் தொடர்பான இந்த நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை நிலையான தீர்வு எட்டப்படாததால், மக்கள் மீண்டும் தங்களது உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 11 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே கேப்பாபிலவில் இடம்பெறவுள்ள இந்த நீதிக்கான, உரிமைக்கான போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், இளைஞர் அமைப்புகளும், பொதுமக்களும் , கட்சிகளின் பிரதிநிதிகள், கட்சி, மத, இன பேதமின்றி ஒன்றிணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதோடு, பூர்வீக காணிகள் உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும் என மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04.07.2026) பதினோராவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் கேப்பாப்புலவு பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button