இலங்கை

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் வலியுறுத்தல்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் சர்வதேச விசாரணை அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், செம்மணி புதைகுழி தொடர்பாக அண்மையில் நீதி அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தாலும், விசாரணைகள் அதனுடன் மட்டும் நிறுத்தப்பட்டுவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

கிரிஷாந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையிலுள்ள சோமரத்ன ராஜபக்ஷ , பல ஆண்டுகளாக செம்மணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொழும்புத்துறை, அரியாலை உள்ளிட்ட பகுதிகளிலும் புதைகுழிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

எனவே, இச்சம்பவங்களுடன் தொடர்புடைய தகவல்களை வழங்கக்கூடிய சோமரத்ன ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, அவர் சுட்டிக்காட்டும் இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

அதேவேளை, மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும், தற்போது செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ள நிலையில், இவ்விவகாரம் மிகப்பெரிய மனித உரிமைச் சிக்கலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இத்தகைய பழமையான மனித எச்சங்களின் அடையாளங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் போதுமான அளவில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.

“இந்த விசாரணையின் நோக்கம் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதும், எதிர்காலத்தில் இத்தகைய கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதுமாக இருக்க வேண்டும்.”

மேலும், மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button