உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கர்தினாலுக்கு முன்னரே தெரியுமென்பது பொய்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதுடன், அவை அடிப்படையற்றவை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளரான ஆயர் சிறில் காமினியே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. இந்த முற்றிலும் உண்மையற்ற கருத்துக்களாகும். முதன்முதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ 2020 ஆம் ஆண்டில் அந்த தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து இது தொடர்பான கருத்துக்கள் சமூகத்தில் பரவத் தொடங்கின. இந்நிலையில் இந்த கூற்று முற்றிலும் பொய்யானது என்று 2020 செப்டம்பர் 19 அன்று கத்தோலிக்க சபையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை மூலம் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அனைத்து முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவினருக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் கர்தினால் ஆண்டகை இதனை அறிந்திருந்தார் என்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும் முற்றிலும் பொய்யானவையே, இதனை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறான பொய் பிரசாரங்களின் நோக்கம், தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தி, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதே ஆகும். எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் இதுபோன்ற அடிப்படையற்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.
![]()