இலங்கை

கோதா கைதாவாரா? அரசு கூறுவதென்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வெளிவரும் விடயங்களை பொறுத்தே முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தான் கைது செய்யப்படுவதற்கு தடையுத்தரவை விதிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கோதாபய ராஜபக்‌ஷவின் தொடர்பு தொடர்பான தகவல்கள் என்னிடம் இல்லை. விசாரணைகளில் வெளிவரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்படுவரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும்.

அது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணியாகும். விசாரணைகள் நடைபெறும் முறைகளை பார்க்கும் போதும், தகவல்கள் வெளிவரும் விதங்களை பார்க்கும் போதும் விசாரணைகள் சரியாக நடக்கும் போதும் அது தொடர்பில் அச்சத்தில் இருப்பவர்கள் விசாரணைகள் தனது பக்கமும் திரும்புமா என்று நினைக்கலாம். எவ்வாறாயினும் முன்வைக்கப்படும் சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளுக்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button