உலகம்

ஒப்பந்தத்தை மீறினால் அதிரடி பதிலடி ; ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ளதாகக் கூறப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கருத்தை அவர் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானின் உறுதியான நிலைப்பாடே பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் முக்கிய மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாகவே அமெரிக்கா, ஈரானின் நிபந்தனைகளை ஏற்று பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும், பிராந்திய பதற்றங்களை குறைக்கும் நடவடிக்கைகளின் மூலமும் அமெரிக்கா தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறி செயல்பட்டால், அதற்கான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான அழுத்தங்களையும் திணிப்புகளையும் மேற்கொள்ளும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button