சூழ்ச்சியின் தாண்டம்!… கவிதை… ஜெயராம்சர்மா

பாரதக் கதையில் பற்பல சூழ்ச்சி
சூழ்ச்சியைச் சகுனி தொடக்கியே வைக்கிறான்
கண்ணனின் சூழ்ச்சியால் கதையே முடிய
சூதும் வாதும் தோற்றுமே போகுது
கீதை பிறக்குது பாதை விரியுது
சூதும் வாதும் சொல்லாமல் மறையுது
நீதி நிலைக்குது நெஞ்சம் நெகிழுது
கண்ணனின் சூழ்ச்சி நல்லதை நல்குது
கூனியின் சூழ்ச்சியால் குலைந்தது அயோத்தி
மாமன்னன் தசரதன் மாண்டுமே போனான்
அறத்தின் நாயகன் அலைந்தே திரிந்தான்
அன்னையாம் சீதையை இராவணன் கவர்ந்தான்

மாரீசன் சூழ்ச்சியும் மற்றரக்கர் சூழ்ச்சியும்
மாவீரன் இராவணன் வாழ்வையே அழித்தது
வாலியும் மாண்டான் வல்லரக்கர் மாண்டார்
கூனியின் சூழ்ச்சியே ஆணியாய் அமைந்து
கூனியின் சூழ்ச்சி குழப்பமாய் இருந்தாலும்
தசரதன் தலைமகனைத் தரணிக்கே காட்டியது
புனிதமும் பொறுமையும் நிறைந்த பேருருவாய்
தசரத ராமனைத் தந்ததும் சூழ்ச்சியே
அரசிலும் சூழ்ச்சி ஆட்சியில் சூழ்ச்சி
சூழ்ச்சியே எங்கும் சூழ்ந்துமே இருக்கு
உறவிலும் சூழ்ச்சி உள்வீட்டிலும் சூழ்ச்சி
சூழ்ச்சியின் தாண்டம் தொடர்ந்துமே போகுது
சூழ்ச்சியின் சூட்சுமம் சுகமாக இருந்தால்
சூழ்ச்சியினை வெல்லச் சூழ்ச்சியும் தேவை
சூழ்ச்சியால் அத்தனையும் பாழாகும் நிலையில்
சூழ்ச்சியைத் தீயிட்டுக் கொழுத்தியே விடுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()