சலேயின் மடிக் கணினி,கைபேசி கடவுச் சொல்லை பெற அனுமதிக்க முடியாது

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் கைத் தொலைபேசியின் கடவுச் சொல்லை (பாஸ் வேர்ட்) பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு கடவுச் சொல்லை பெற்றால் அது தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையாக அமையலாம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் கைத்தொலைப் பேசியின் கடவுச் சொல்லை அவர் தர மறுக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு வழங்காமல் இருக்க முடியாது என்றும், கடவுச்சொல்லை வழங்க வேண்டும் என்று அரசியல்வாதியொருவர் கூறியிருந்தார். ஆனால் தேசியப் பாதுகாப்பு தொடர்பிலும், புலனாய்வு தகவல்கள் தொடர்பிலும் ஒரு துளியளவும் அறிவு இல்லாதவர்களே அவ்வாறு கூறுவார்கள். அவ்வாறு அவற்றின் கடவுச் சொல்லை கொடுப்பதென்றால் முதலில் நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். குறிப்பாக ஷானியிடமும், ரவியிடமும் அதனை எப்படியும் கொடுக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் என்று ஆணைக்குழு அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களிடம் அந்த புலனாய்வு தகவல்களை கொடுக்க முடியாது.
குறித்த மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசிகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் இருக்கலாம். கடந்த பல வருடங்களாகவும் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பான புலனாய்வு தகவல்கள் இருக்கலாம். இதனால் நீதிமன்ற உத்தரவு மூலம் சுயாதீன ஆணைக்குழுவிடம் மட்டுமே அவற்றின் கடவுச் சொற்களை கொடுக்க முடியும்.
குறிப்பாக மிலேனியம் சிற்றி தொடர்பான விடயத்தை நினைத்துபார்க்க வேண்டும். அதன் புலனாய்வு அறிக்கைகளை உடுகம்பொல என்ற நபரே வெளிப்படுத்தினார். அதன்பின்னர் சில வாரங்களில் புலனாய்வு அதிகாரிகளை விடுதலைப் புலிகள் கொலை செய்தனர். இவ்வாறான நிலைமைக்கு கொண்டு செல்வதற்காகவா முயற்சிக்கப்படுகின்றது என்று கேட்கின்றேன். இதனால் நாங்கள் எப்போதும் சலேவுக்காக முன்னிற்போம் என்றார்.
![]()