பலதும் பத்தும்

கனடாவில் சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட விமானம்!

கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமான பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விமானத்தில் சிறுவர்கள் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ‘போர்ட்டர் எயார்லைன்ஸ்’ (Porter Airlines) வானூர்தியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும் அடம்பிடித்துள்ளான்.

பயணிகள் கடும் அதிருப்தி

சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் வானூர்தி ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் வானூர்தியை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.

இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், வானூர்தியை அன்றைய தினம் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் சிறுவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் வானூர்தி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

அதோடு சிறுவன் ஒருவனின் நடத்தையால் முழு வானூர்தி பயணமும் ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது என்றும், அந்த குடும்பத்தை மட்டும் உடனடியாக வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

முன்னதாக 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சவுத் வெஸ்ட் எயார்லைன்ஸ் (Southwest Airlines) மற்றும் ஜெட்ப்ளூ (JetBlue) ஆகிய வானூர்தி நிறுவனங்களிலும், ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வானூர்திகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button