கலாபூசணம் சபாபதிப்பிள்ளை சந்திரசேகரம், பன்முக ஆளுமை கொண்ட ஓய்வுநிலைக் கொத்தணி அதிபர்… சின்னத்தம்பி குருபரன்


‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த தன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை…’
என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள். இப்பாடலடிகள் வாழ நினைத்தவரின் வாழ்வை மாற்றியமைத்து வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. வாழ்க்கைக் கடலில் தத்தளித்து நிறபவருக்கு ‘உனக்கும் கீழே உள்ளவர் போடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு…’ என்று ஆசுவாசப்படுத்தினார். இதுவே மனித வாழ்க்கையுமாகும். இந்த இயற்கையில் எல்லாம் கொட்டிக் கிடக்கிறது. ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் …’ வாழ நினைத்தவனுக்குச் சொர்க்கம். வாழ முடியாதவனுக்கு நரகம் போன்றது இவ்வுலகம். பயிற்சி, முயற்சி, அனுபவம், உழைப்பு, ஆற்றல், விடாமுயற்றி இருந்தால் எதையும் சாதித்து விடலாம். அப்படிப்பட்டவருக்கே இந்த இயற்கை (உலகம) சொந்தமானது. அவருக்கே வாய்ப்புக்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும். அவரே வாழ்க்கையில் சாதனைகள் புரிலார். ‘இவன்பால யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…’ இவ்வகைப்பட்டவர் வாழ்க்கையில் தடம் பதித்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்பார். இத்தகையவர்கள் சிலரே உள்ளனர்.
நமது வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கையை நாமே திட்டமிட்டு நாமே அவ்வாழ்க்கையை வாழ வேண்டும். இன்னொருவரின் தலையிடும், அளவுகடந்த நம்பிக்கையும் நம்மை திசை திருப்பித் திசை மாற்றிவிடும. அவரைப்போல், இவரைப்போல், அந்தமாதிரி, இந்தமாதிரி என வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிவிடும். சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு நமது வாழ்க்கையை நாமே வாழ வேண்டும். பேராசை கொள்ளாமல் கிடைப்பதைக் கொண்டு, இலக்குடன் வாழ்பவர் மாத்திரமே மகிழ்ந்சியாக வாழவார். பேராசை கொள்ளாமல் கட்டுக்கோப்பாக வாழ்ந்தவரே பன்முக ஆளுமை கொண்டு தமது குடும்பத்துக்காகவும் சுமூகத்துக்காகவும் தான் ஏற்றுக் கொண்ட பணிக்காகவும் அர்ப்பணிப்போடு வாழ்ந்தபரே ஓய்வுநிலைக் கொத்தணி அதிபர் சபாபதிப்பிள்ளை சந்திரசேகரம் ஆவார். சிறந்த ஆசிரியராக, அதிபராக, சமூக சேவகராக, ஆன்மீகச் சொற்பொழிவாளராக, பட்டிமன்ற நடுவராக, பண்ணுடன் திருமுறை ஓதுபவராக, எழுத்தாளராக, அகில இலங்கை சமாதான நீதிவானாக, பல ஆலயங்கள், சமூக நிறுவனங்களில் பல பதவிகள் வகித்த ஒருவராக, சிறந்த குடும்பத் தலைவனாக, சமயத் திருப்பணிகள் செய்தவராக, எனது குருவாக, மேலதிகாரியாக பல விருதுகளுக்குச் சொந்தக்காரராகவும் மும்மொழித் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றவராகவும் சந்திரசேகரம் அவர்களை நான் பார்க்கிறேன்.
திருவாளர் சந்திரசேகரம் மட்டக்களப்பு, களுதாவளை என்னும் பழம் பெரும் கிராமத்தில் சபாபதிப்பிள்ளை கந்தம்மை தம்பதியரின் ஒன்பதாவது இறுதிப் புதல்வராக 30.10.1938 இல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியைக் மட்/களுதாவளை இராமகிருஷ்ணமிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், கனிஷ்ட இடைநிலை ஆந்கில மொழி மூலக் கல்வியைக் களுதாவளை கனிஷ்ட வித்தியாலயத்திலும் (களுதாவளை மகா வித்தியாலயம்), சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை மட்/சிவாeந்தா வித்தியாலயத்திலும் கற்று, 1955 திசெம்பரில் சிரேஷ்ட இடைநிலைத் தராதரப் பத்திர (SSC) பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார். 1958-1960 காலப் பகுதியில் குண்டகசாலை விவசாயப் பயிற்சிப் பாடசாலையில் கற்று விவசாய டிப்ளோமா பட்டம் பெற்றார். பட்டம் பெற்றும் அரச தொழிலுக்காக நான்கு வருடம் காத்திருந்த வேளையில் விவசாயம், மரக்கறித் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் பெற்ற விவசாயப் பயிற்சி சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு அத்துறையில் வெற்றி காண்பதற்குப் பேருதவியாய் இருந்தது.
ஆங்கில ஆசிரியர் தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 15.07.1964 இல் ஆங்கில உதவி ஆசிரியர் நியமனம் பெற்று மட்/களுதாவளை இரதமகிருஷ்ண மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். ஆசிரியர் பயிற்சிக்கான போட்டிப் பரீட்கையில் சித்தியடைந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் பாட ஆசிரியராக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அம்பாறை ஹாடி உயர் தொழினுட்பக் கல்வி நிறுவனத்தில் நடாத்தப்பட்ட விவசாய ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டுப் பயிற்சியின் நிறைவில் விவசாய விஞ்ஞான பாட ஆசிரியராகப் பதவி ஏற்றார். 1970-1972 வரை மட்/முதலைக்குடா ஸ்ரீகோபால் மகாவித்தியாலயத்தில் (முதலைக்குடா மகா வித்தியாலயம்) விவசாய விஞ்ஞான ஆசிரியராகக் கடமை ஏற்று, விவசாய விஞ்ஞான பாடத்துடன புவியியல் பாடத்தையும் சிறப்பாகக் கற்பித்தார். அவரிடம் கற்ற பெரும்பாலான மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரு பாடங்களிலும் திறமைச் சித்திகளைப் பெற்றனர். தா.சிதம்பரப்பிள்ளை, சி.சிவபாதசுந்தரம், கலையரசி, குணலெட்சுமி போன்றோரைக் குறிப்பிடலாம்.
அடமாற்றம் கிடைத்த்ம் தமட்/களுதாவளை மகா வித்தியாலயத்திற்குச் சென்று 01.01.1973 -31-12-1977 வரை பணியாற்றிய காலப்பகுதியில் (07.04.1975) முதலைக்குடாவைச் சேர்ந்த கறுத்தாப்போடி இராசம்மா தம்பதிகளின் மகள் மங்கையவல்லியைத் திருமனம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இல்லற வாழ்க்கையின் பேறாக 1982.02.19 இல் ஏகபுத்திரியாக பிரேமப்பிரியா பிறந்தார். 01.01.1978 முதல் 14.07.1995 இல் ஓய்வு பெறும்வரை முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் 1990 திசெம்பர் முதல் கொத்தணி அதிபரகப் 18 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1978, 1979 காலப் பகுதியில் சமூகக்கல்வி, விவசாய விஞ்ஞானம் ஆகிய பாடங்களை சந்திரசேகரம் அவர்களிடம் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைதது. அதேபோல் அவர் அதிபராக இருந்தபோது முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் 1991-1993 இல் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அப்போது மண்முனை தென மேற்குக் கோட்டத்தில் இருந்த 13 பாடசாலைகளுக்கான கொத்தணிப் பாடசாலை அதிபராகப் பணியாற்றிச் சிறந்த சேவையாற்றினார். அவர் கொத்தணி அதிபராக இருந்த காலத்தில் கற்சேனை அ.தக.பாடசாலை, கொல்லனுலை விவேகாநந்தா வித்தியாலயம் ஆகியன புதிதாக ஆரம்பிக்கப்பட்டன.
மண்முனை தென் மேற்கு, கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் முதன் முதலாக 1982 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைப் போட்டிப பரீட்சையில் சித்தியடைந்தவராக மேனாள் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் அமரர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா காணப்பட்டார். இரண்டாவதாக 1990 இல் அப்பரீட்சையில் சித்தியடைந்து வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சிலும் வடக்கு, கிழக்கு மாகாஒக் கல்வித் திணைக்களத்திலும் பிரதிக் கல்விப் பணிப்பாளாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சிந்தாத்துரை வரதசீலன் காணப்பட்டார். அவர்களைப் போன்று 1990 நடைபெற்ற முதலாந்தர அதிபர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த மன்முனை தென்மேற்குப் பிரதேசத்தின் முலாவது நபராகத் திரு சபாபதிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் கொள்ளப்படுகின்றார். எருடனும் முரண்பட்டுச் செல்லாது, புத்திசாதுரியமாகச் செயற்பட்டுச் சென்றதனால் பரீட்சையில் சித்தியடைந்தவுடன் வழங்கப்பட்ட அதிபர் நியமனத்துடன் பதவி உயர்வாக கொத்தணி அதிபர் நியமனமும் அவருக்குக் கிடைத்தது. உள்நாட்டு யுத்தக் கெடுபிடிகள் அதிகரித்திருந்த காலப் பகுதியில் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள், அரச பதவிகளில் உள்ளவர்கள் படுவான்கரைப் பிரதேசத்தில் இருந்து நகரப்புறங்களை நாடிச் சென்ற போதிலும் சந்திரசேகரம் அவர்கள் அப்பிரதேசத்தில் இருந்து உந்துருளி இல்லாத அக்காலப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று மன்முனை தென் மேற்குப் பிரதேசப் பாடசாலைகளைத் தரிசித்து முகாமை செய்து வந்தார்.
அப்பிரதேசத்தையும் மக்களையும் மாணவர்களையும் நேசித்ததன் காரணமாக 50 வருடங்களுக்கு மேலாக அரச பணியில் இருந்த போதும், பணி ஓய்வு பெற்ற பின்னரும் தன்னால் முடிந்தவரை கல்வி, சமய, சமூக, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
சந்திரசேகரம் அவர்கள் எப்போதும் பொது நலன் பற்றியே பேசுவார். 2026 வரை கல்வி, சமூக, சயப் பொதுப் பணிகளில் சளைக்காது ஈடுபட்டு வந்தார். கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலுள்ள கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்றதனால் சகரும் அவரை மரியாதையோடு “ஐயா” என்றே அழைத்தனர். பொது வாழ்க்கையில் முதலைக்குடா பாலையடி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையில் ஆறு ஆண்டுகள் தலைவராகவும் பின்னர் போசகராகவும், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உப தலைவராகவும், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்லரர் ஆலயத்தில் கணக்குப் பரிசோதனைக் குழு உறுப்பினராகவும், முனைக்காடு ஒளிக்கல்லூரி நிறுவன ஆலோசகராகவும் பல பதவிகளில் இருந்து சிறப்பான பணியாற்றினார். அப்பிரதேசத்திலுள்ள சகல ஆலயங்களிலும் திருமுறை (திருவாசகம், திருமந்திரம்) முற்றோதல் நிகழ்வுகளில் பங்கு கொண்டு சகலரினதும் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அத்தோடு அப்பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களின் திருவிழாக் காலங்களில் பஞ்சபுராணம் பண்ணோடு பாடுவதில் பிரதானமான ஒருவராகவும் காணப்பட்டார். கரகாட்டம், வசந்தன் ஆடல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்ததோடு பல நூல்களுக்குப் பல்துறை சார்ந்த வகையிலான கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். அதனால் அவருக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.
சந்திரசேகரம் அவர்கள் ஆற்றிய கல்வி, சமூக, சமய, இலக்கியப் பணிகளுக்காகப் பல விருதுகள், கௌரவங்கள், பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். தினக்குரல், தென்றல் FM (பண்பலை) வானொலி ஆகியவற்றின் அனுசரணையுடன் மண்முனை தென் மேற்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசம் 18.03.2012 இல் நடாத்திய ‘சாதனையாளர் கௌரவிப்பு’ விழாவின்போது அவர் 35 வருடங்களுக்கு மேலாகக் கல்வி, சமூகப் பணிக்காக ஆற்றிய நற்பணிகளுக்காக ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச கலை, இலக்கிய, சமூக அபிவிருத்தி ஒன்றியம் 31.03.2012 இல் நடாத்திய ‘மண்கமழும் மங்கல விழா’வின் போது சந்திரசேகரம் அவர்கள் அப்பிரதேசத்தில் ஆற்றிய ஆன்மீகப் பணிக்காக ‘ஆன்மீகக் குரல்’ எனும் விருது வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகம் 29.12.2015 இல் நடாத்திய பிரதேச கலாசார விழாவின்போது சந்திரசேகரம் அவர்கள் அப்பிரசேத்தில் ஆற்றிய ஆன்மீகப் பணிகளைக் கௌரவிக்கும் முகமாக ‘ஆன்மீகச் சுடர்’ விருது விழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட தேசிய கலாசார அரச விருது வழங்கும் விழாவின்போது சமய, கலாசாரம், இலக்கியம் என்பவற்றின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளைக் கௌரவித்து 15.12.2016 அன்று ‘கலாபூசணம்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
உருவத்தில் அகத்தியர் திரைப்படத்தில் வரும் சீர்காளி கோவிந்தராசன் போன்ற தோற்றமுடைய சந்திரசேகரம் அவர்கள் உடல், சொல், பொருள், மெய்களால் யாருக்கும் தீங்கிழைக்காத தூய்மையான மனம் கொண்டவர். பண்பானவர், கல்வி, சமய, ஆன்மீகச் சொற்பொழிவாளர், பல நிகழ்வுகளை முன்னின்று நடத்திப் பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறார். பல பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டிருக்கிறார். மண்முனை தென் மெற்குப் பிரதேச செயலக, பிரதேச கலாசார விழா ஆண்டு மலர்களிலும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய ‘தேரோட்டம்’ (1998) மலரிலும், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப் பிள்ளையார் கொயில் குடமுழுக்கு ‘தாந்தா மலைமாடசி’ மலரிலும் முதலைக்குடா மகாவித்தியாலய ஐம்பதாவது ஆண்டு விழா மலர், இவை தவிர வேறு பல மலர்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 88 வயதாகியும் பல்துறைசார்ந்த தளராத உழைப்பாளி. தற்போது சற்று உடல் தளர்ந்த நிலையில் இருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் பதவியில் இருந்தபோதும் பொது வாழ்க்கையிலும் தர்க்கம், கருத்து முரன்பாடுகள் ஏற்பட்ட போதெல்லாம் தான் முரனபடாமல் சமாதானமாகப் போய் எதையும் தீர்த்துக் கொள்ள முனைவார். அன்பாகப் பேசிப் பழகுவார். எந்த வேளையிலும் அவர் முகத்த்ல் அவருக்கேயுரிய புன்சிரிப்புடன் காணப்படுவார். அன்பான மனைவி, பண்பான மகள், குணமான மருமகன் சண்முகம் பார்த்தீபன், மூன்று பேரப் பிள்ளைகளுடனும் சந்தோசமாக வாழ்ந்து, தனது பொதுப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தனது மகளின் கணவன் சண்முகம் பார்த்தீபனின் இறப்பு (2022) அவரை வெகுவாகப் பாதித்தது. இருந்தும் ‘நடப்பது நடந்தே தீரும்’ என்ற நம்பிக்கையோடு இயல்பாகவே வாழப் வழகிக் கொண்டார்.
எதற்கும் கோபப்படாமல் விட்டுக் கொடுத்துச் சமாதானமாகப் போகும் இயல்பான சுபாவம் பாடசாலை அதிபர் முகாமைத்துவத்தில் சிலவேளை சவாலாகவும் அமைந்தன. இதுவும் சிலவேளை முகாமைத்துவத்தில் ஒருவகையான பலவீனமாகவே கொள்ளப்படும். எப்போதும் ஒருவரின் பலம் மற்றவரின் பலவீன்த்துக்கூடாகவே கட்டி எழுப்பப்படும். இதனை நன்கு இனங்கண்டு கொண்ட சில ஆசிரியர்கள் அவரைத் தமது போக்குக்குப் பயன்படுத்திக் கொண்டதுமுண்டு. அதனால் பலரோடு முரண்பட வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன. இதனை அவருக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகமாகப் பலரும் கூறினர்.
அது மாத்திரமின்றி 30.10.1998 பதவியில் இருந்து ஓய்வு பெறவேண்டிய அவரை அக்கால உகப்பற்ற சூழல் கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தித்து 15.07.1995 இல் ஓய்வு பெறச் செய்தது. இதற்கு அவருடன பணியாற்றிய ஒரு சில ஆசிரியர்களும் கொத்தணிப் பாடசாலைகளின் ஒருசில அதிபர்களும் காரணமாக இருந்தனர். அவர் முன்கூட்டி ஓய்வு பெறால் வேறு ஒரு பிரதேசப் பாடசாலை ஒன்றுக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தால் 1997 இல் கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கென மறுசீரமைக்கப்பட்ட சம்பளத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அதன் பலனை ஓய்வூதியத்திலும் அனுபவித்திருப்பார். இதைப் பற்றியெல்லாம் கவலையும்படாமல் குடும்பம், கல்வி, சமூக, சமய, ஆலயத் திருப்பணியென ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மன நிறைவோடு வாழப் பழகிக் கொண்டார். இத்தகைய பன்முக ஆளுமை கொண்ட அவரின் அர்பணிப்பான வாழ்க்கை சமூகத்துக்குச் சிறந்ததோர் முன்னுதாரணமாகும்.
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ (கீதாசாரம்)
![]()