சம்பூர்தாசன் கனகசூரியம் யோகானந்தனின் காற்றுக்குத் தூதுவிட்டு…. கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை…. சின்னத்தம்பி குருபரன்.

மானுடத்தை நேசித்து, வாழ்வியலின் சமகாலப் பிரக்ஞைகளை, துன்பங்களைத் துயர்களை உள்வாங்கி மனித நேயத்துடன் தமது இனத்தின் விழுப்புண்களை கவிதைகளாகப் புனைந்து வெளிக் கொணர்பவர்களில் ஒருவர்தான் சம்பூர் தாசன் எனப்படும் கனகசூரியம் யோகானந்தன் ஆவார். அவரின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பான ‘காற்றுக்குத் தூதுவிட்டு…’ எனும் கவிதை நூல் என் கரம் கிட்டியது. தான் ஓர் ஆசிரியராக, அதிபராகக் கடந்து வந்த பாதையில், தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட தடைகள், பிரச்சினைகள், வேதனைகள், அச்சுறுத்தல்கள், தனது சமூகம் எதிர்கொண்ட துன்ப துயரங்கள், வேதனைகள்,
யுத்த சூழல், அதனால் எற்பட்ட அச்சுறுத்தல்கள், இடப்பெயர்வுகள் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு மனித நேயத்துடன் பிரக்ஞைபூர்வமாகத் தான் வகுத்துக் கொண்ட பாணியில், நடையில் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கின்றமை பாராட்டுக்குரியது. படைப்பாளி தனிக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, அப்பாதையின் வழியே தெளிவான, நிதானமான, ஆணித்தரமான நிந்தனையுடன் கருப்பொருள், வடிவம், உருவம், உள்ளடக்கம், உத்தி,கனதி, நேர்த்தி என்பவற்றில் கவனமெடுத்துத் தன் கவிதைகளை வெளிக்கொணர்பவர் ஆகின்றார். அத்தகைய கவிதைகளே வாழும் கவிதைகளாகின்றன.
கனகசூரியம் யோகானந்தன் மூதூர் சம்பூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணத்தின் பின்னர் இருந்து திருகோணமலை நகரில் வசித்து வருகிறார். சம்பூர் மகா வித்தியாலயத்தில் கற்கின்ற காலத்தில் 1980 களில் கவிதை எழுத ஆரம்பித்தவர். பெராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவல் கற்கும் காலத்தில் (1983-1986) அவரிடம் கவிதை எழுதிய அப்பியாசக் கொப்பி ஒன்று கைவசம் எப்போதும் இருக்கும். நாங்கள் எல்லோரும் சம்பூர்க் கவிஞர் என்றே அழைப்போம். 1986 இல் பேராதனைப் பல்கலைக்கழகச் சங்கப் பலகையில் ராஜகவி ராகில் (நிந்ததாசன்) யோகானற்தன் (சம்பூர்தாசன்), குருபரன் (சோலையூர் குருபரன்) ஆகியொரின் கவிதைகள் அடிக்கடி இடம் பெற்றிருக்கும். ராகில், யோகானந்தன் இருவரும் பல சாதனைள் புரிந்து இன்றுவரையும் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். நான் பல்துறை சார்ந்த வகையில் எழுத்துத் தறையில் தடம் பதித்தமையால் கவிதை எழுதுவதில் சற்றுத் தளர்வு ஏற்பட்டது.
யோகானந்தம் புகழ்பெற்ற கவிஞராக, தமிழ்துறை சார்ந்த ஆசிரியராக, சிறந்த அதிபராக, பேச்சாளராக, பட்டிமன்ற நடுவராக, இலக்கிய விமர்சகராக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரையாளராக, நாடக நடிகர் எனப் பன்முக ஆழுமை கொண்ட ஒருவராகப் பல விருதுகள், கௌரவங்கள், பட்டங்கள், பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரனாக அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கனகசூரியம் யோகானந்தன் தேசிய சாகித்ய விருது (2006, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய வித்தகர் விருது (2023), கலாசார அமைச்சின் இலக்கிய கலாபூஷணம் விருது (2025), திருகோணமலை நகர முதல்வர் விருது (2014), சம்பூர் தமிழ்க் கலாமன்றம் வழங்கிய சம்பூர்ணம் விருது (2022), தமிழ்நாடு வளரி இமயன் விருது (2022), கல்வி அமைச்சின் பிரதீபா பிரபா விருது (2013) இவற்றுடன் உலகத்தமிழர் கலை, பண்பாட்டுப் பேரவையின் (சர்வதேசம்) இணை உரைத்திலகம் (2021), உலகத் தமிழர் கலை, பண்பாட்டுப் பேரவை (சர்வதேசம்) கல்வித்தூதர் ஆகய பட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். உபதலைவர், கலை, பண்பாட்டுப் பேரவை (இலங்கைக்கிளை), உபதலைவர், திருகோணமலைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றிலும் பதவி வகித்திருக்கின்றார். அத்தோடு இலக்கியத்துறை சார்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர், விவாதப் பயிற்றுவிப்பாளர் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். யோகானந்தன் பாடல் எழுதித் தமிழக இசையமைப்பாளர் ரீ.எல்.மகராஜன் இசையமைத்துப் பாடிய ‘திருமலை உறையும் கோணேசா…’ என்ற பாடல், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகக் கீதம், நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரிக் கீதம் ஆகியவற்றையும் இயற்றி வழங்கியுள்ளார்.
இவர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல்களாக ‘உண்மை என்றும் உயிர் பெறும்’ (கவிதைத் தொகுப்பு நூல் தேசிய விருது பெற்றது) ‘என் மன வானில்’ (கவிதைத் தொகுப்பு) ‘மழலைக்கோர் பாட்டு’ (சிறுவர் பாடல் தொகுப்பு) ‘நதியில்லா ஓடம்’ (கவிதை தொகுப்பு, 2019, ‘காற்றுக்குத் தூதுவிட்டு’ (கவிதைத் தொகுப்பு, 2023) ஆகிய தொகுப்பு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
ஒரு படைப்பாளி ‘நிரந்தரமானவன் நான் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை…’ என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தன் கவித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுவே வாழும் கலைஞனுக்குரிய உயிர்ப்பான தூண்டுதலாகவும் அமைகின்றது. அந்த வகையில் யோகானந்தன் இவற்றையெல்லாம் உள்வாங்கித் தனது கவித்துவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். காற்றுக்குத் தூதுவிட்டு… எனும் கவிதைத் தொகுப்பு கருப்பொருளை உள்வாங்கிய அழகான அட்டைப் படத்துடன் 89 பக்கங்களில், பின்னட்டையில் வைத்தியகலாநிதி அருமைநாதன் சதீஸ்குமார் அவர்களின் நூலாசிரியர் பற்றிய அறிமுகத்துடன் வெளிவந்திருக்கிறது.
நூலுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் சிறப்பான அணிந்துரை ஒன்றினை இலங்கை, தென்கிழக்குப் பல்கலைக்கழக, தமிழ்த் துறைப் பேராசிரியர் ஏ.எவ்..எம்.அஷ்ரஃப் பதிவிட்டிருக்கின்றார். தெளிவான முன்னுரை ஒன்றினை ‘இயற்கையே, நீ வாழி!’ எனத் தலைப்பிட்டு கிழக்குப் பல்கலைக்கழக மேனாள் மொழித் துறைத் தலைவர் மறைந்த பேராசிரியர் செ.யோகராசா அழகாகப் பதிவு செய்திருக்கின்றார். தனது பல்கலைக்கழக நண்பர் கலாபூசணம் ராஜகவி ராகில் ‘நட்பு என்பது சிப்பியை முத்தாக்கக் கூடியது’ எனத் தனக்குரித்தான பாணியில் மிக ஆழமான பதிவொன்றினைச் இட்டிருக்கின்றார். இத்தகைய முப்பெரும் ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாட்டினைத் தாங்கி காற்றுக்குத் தூதுவிட்டு… வெறிவந்திருப்பது நூலுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.
யோகானந்தனின் கவிதைகளில் கடந்த காலம் பற்றிய ஏக்கமும் தவிப்பும் தென்படுகிறது. அகமும் புறமும் சார்ந்த வகையியி்ல் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் மன உணர்வுகளைக் கோடுகளாகவும், கோலங்களாகவும் வெளிப்படுத்தி இருக்கின்றார். உலகியலையும் உள்ளடக்கத்தையும் தெளிவாக விளங்கிக் கொண்டு உத்திகளைக் கையாண்டு எளிய நடையில் கவி புனைந்திருப்பது பாராட்டத்தக்கது.
ஒவ்வொரு படைப்பாளியும் தமது படைப்பில் தனித்துவம் பேணுவார். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். தான் வாழ்ந்து உறவாடிய சமூகம், தான் நேசித்த சூழல், அச்சமூகத்துக்குரிய வாழ்க்கை முறை, தனித்துவமான அம்சங்கள், தனியாள வேறுபாடு, எடுத்துக் கொண்ட கருப்பொருள், உருவம், உள்ளடக்கம், உத்தி என்பன இயல்பாகவே தமது கவிதைகளில் வேறுபடுவது இயல்பாகும். அதற்கேற்றால்போல் படைப்பாளியின் உணர்வுகளும் மனவெழுச்சியும், கையாளும் முறையும், நடையும் வேறுபடும். அதுவே அவருககுரிய தனித்துவமாகவும் சிறப்புக்குரியதாகவும் அமைகின்றது. இத்தகைய காலவோட்டத்துக்கான போக்கினை இந்நூலின் பெரும்பாலான கவிதைகளில் காணலாம்.
காற்றுக்குத் தூதுவிட்டு… கவிதைத் தொகுப்பில் அடக்கமான அறுபது தலைப்புக்களில் கவிதைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான கவிதைகள் குறியீட்டு வடிவிலும், இன்னும் சில படிமங்களாகவும், சில கவிதைகள் குறியீடு, படிமம் கலந்தும் கனதியோடு கையாளப்ப்டிருக்கின்றன. இதில் யோகானந்தனின் கவித்துவ ஆற்றல் வெளிப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம். சில கவிதைகள் சமூகப் பிரக்ஞைகளை ஆழமாக நோக்குகின்றன. இவரது கவிதைகளில் காதல், ஏக்கம், அன்பு, பாசம், கருணை, நேசம், ஆசை, இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, விரகதாபம், கோபம், வறுமை, ஆவேசம், துன்பியல் யுத்தகால அவலங்கள் ஆகியன மானுட நேயத்துடன் எதிரொலிப்பதை அவதானிக்கலாம். ஒரு சில கவிதைகளில் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற கவிஞரின் ஆழப் பார்வையும் தென்படுகிறது.
இத்தொகுப்பில அடங்கும் காற்றுக்குத் தூதுவிட்டு, காத்திருப்பு, துயரம் தரும் வலிகள், மேக ஊர்வலம், அகலிகை, தியாகச் சுவடுகள், செந்நிறம், கோட்பாடுகள், உடைந்த நிலவு, இருளின் சங்கமம், உணர்வுகள், தொடரும் பயணங்கள், உயிர்ப்பு, கொல்லும் இரவுகள் ஆகிய இன்னோரன்ன கவிதைகளில் கையாளப்பட்டிருக்கும் குறியீட்டு உத்திகள் சிந்தனைக் கிளறலையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. சில வரிகள் ஆழமான கருத்தாடலைத் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. சில ஆர்வத்தைத் தூண்டி உணர்வுக்குப் பிரகாசமூட்டுகின்றன. யோகானந்தனின் கவிதைகளில் ஒரு கவிஞனிடம் காணப்பட வேண்டிய தனித்துவமும் சிறப்பும் கண்டு வியக்கிறேன். 45 வருடகாலக் கவித்துவ ஆற்றலும் தேர்ச்சியும் தடைகளை உடைத்தெறிந்து பிரகாசத்துடன் கவிதைகளில் வெளிப்படுவதைக் காணலாம்.
இத்தொகுப்பலுள்ள பல கவிதைகளில் படிமம், குறியீட்டு உத்திகள் பயன்படுத்தப்பட்டிருப்பதனால் அவை தொடர்பான சிறு விளக்கமளிப்பது பொருத்தம் என நினைக்கிறேன். தமிழ் இலக்கிய மரபிலும், நவீன கவிதையிலும் குறியீடு (Symbol) படிமம் (Imagery) ஆகியவை கவிதைக்கு உயிர் கொடுக்கும் மிக முக்கியமான உத்திகள் எனலாம். இவை கவிதை சொல்லும் பொருளை நேரடியாகச் சொல்லாமல், வாசகனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் விருந்தளித்து, கவிதைக்கு ஓர் ஆழமான தளத்தை வழங்குகின்றன.
படிமம் என்பது கவிதை மொழியின் மூலம் வாசகனின் மனதில் ஒரு காட்சியை (Visual) அல்லது புலன் உணர்வை (Sensory experience) ஏற்படுத்தும் உத்தி. கவிஞன் தான் சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லாமல், ஒரு காட்சியின் மூலமாக விவரிப்பதைக் குறிக்கும். கவிதையைப் படிக்கும்போது வாசகனின் கண்முன் ஒரு படம் விரிவது போன்ற உணர்வு ஏற்படும். இவற்றைக் காட்சிப் படிமம், ஒலிப் படிமம், சுவை/மணம்/தொடு உணர்வுப் படிமங்கள் என வகைப்படுத்தித் தேர்ந்த கவிஞர்கள் கவிதைகளில் கையாண்டு சிறப்புச் சேர்ப்பர். ஒரு உணர்வை அல்லது கருத்தை வாசகனுக்கு மிக நெருக்கமாகவும், ஆழமாகவும் கூறுவதற்கு இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது.
குறியீடு என்பது ஒரு பொருளை அல்லது செயலை, அதற்கும் மேலான வேறொரு பெரிய கருத்தின் அடையாளமாகப் பயன்படுத்துவது. கவிதையில் இடம்பெறும் ஒரு சாதாரண பொருள், கவிதைக்கு உள்ளே ஒரு குறியீடாக மாறிப் பரிமாணம் பெறுகிறது. படிமத்திற்கும் குறியீட்டிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு எ படிமம் அந்த நேரத்துக் காட்சியை மட்டும் சுட்டும், ஆனால் குறியீடு பல அடுக்கு அர்த்தங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக ‘கடல்’ என்பதை முடிவற்ற அறிவு, ஆழமான துன்பம், எல்லையற்ற பிரபஞ்சத்தின் குறியீடாகக் கொண்டு கவிதைகளில் பயன்படுத்துவர். கறியீடு வாசகனைச் சிந்திக்கத் தூண்டி, கவிதைக்கு ஒரு மர்மத்தையும், காலத்தைக் கடந்த தன்மையையும் வழங்குகிறது.
படிமம் விடயத்தைக் காட்சிப்படுத்திப் (Seeing) புலன்களுக்கு வேலை கொடுக்கும். குறியீடு ஒரு விடயத்தை அர்த்தப்படுத்தி (Meaning) அறிவுக்கும் உணர்வுக்கும் வேலை கொடுக்கும். கவிதைக்கு ஒரு ‘அறம் சார்ந்த’ அல்லது ‘தத்துவார்த்தமான’ பரிமாணத்தைக் கொடுக்கக் குறியீடுகள் உதவும். இதனைப் புரிந்து கொண்டு கவிதைகளைப் புனையும்போது கவிதைகளுக்கு அழகினையும் அழத்தையும் கனதியையும் கொடுக்கலாம். தமிழ் கவிதைகளில் மகாகவி பாரதியார், பிச்சவுர்த்தி, வல்விக்கண்ணன், அசோகமித்திரன், அம்பி பொன்றோரையும் இலங்கையில் புதுவை ரெத்தினதுரை, சில்லையூர் செல்வராசன், பண்ணாமத்துக் கவிராயர், மேமன்கவி, ராஜகவி ராகில் போன்றோரையும் சிறப்பாகக் குறிப்பிலாம். அத்துடன் யோகானந்தனும் இணைந்திருக்கிறார்.
இத்தகைய சிறப்புக்களும் தனித்துவமும் கொண்ட காற்றுக்குத் தூதுவிட்டு… கவிதைத் தொகுப்பில் ஓரிரு இடங்களில் காணப்படும் தொய்வுகளை இனங்கண்டு நீக்கியிருந்தால் அக்கவிதைகள் சிறப்புச் சேர்ந்திருக்கும். அத்தோடு குறியீட்டினைக் கலப்பின்றிக் கையாள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். தலைப்புக்கள் ஆரம்பித்து முடிக்கும்போது கருப்பொருள் தொடர்பினைப் பேணுவதும் சிறப்பைத் தரும். அவற்றில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் தனது பன்முக ஆளுமைக்கும் புலமைக்கும் வலுச் சேர்க்கும் வகையில் படைப்புக்கள் மென்மேலும் வெளிக்கொணர வெண்டும் என வாழ்த்துகின்றேன்
![]()