முச்சந்தி

பாரிசில் VP. வாசுகனின் ஓவிய சிற்ப கண்காட்சி….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈழத்தின் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட VP. வாசுகனின் ஓவிய சிற்ப கண்காட்சி பிரான்ஸ், பாரிசில் மே 20 முதல் ஜீன் 13 வரை நடைபெறுகிறது. பிரெஞ்சு மொழியில் “Petite Famille” எனும் குட்டிக் குடும்பம் என்ற தலைப்பில் இக்கண்காட்சி குடும்பங்களின் ஆணிவேர்களை தேடுகின்றன. இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள படைப்புகள், நம்மை வளர்க்கும் இயற்கைப் பொருட்களால் ஆனவை. பல்வேறு நிலப்பரப்புகளில் மேற்கொண்ட பயணங்களின் சேகரிக்கப்பட்ட மண், கல், நிறமிகள் (pigments), காய்ந்த மரத்துண்டுகள், செய்தித்தாள்கள், சிப்பிகள், வர்ணங்கள் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு படைப்புகளில் பின்னிப் பிணைக்கப்பட்டு உயிப்படைகின்றன.

மண்ணை ஒத்த நிறங்களைத் தேர்ந்தெடுத்தது தற்செயலான செயல் அல்ல, அது நம் தோலின் நிறம், நம் மண்ணின் நிறம். எம் பழக்க வழக்கங்கள், நிறம், உடலமைப்பு – நிலத்தின் தாதுக்கள், காலநிலை அல்லது உணவைப் பொறுத்து மாறினாலும், நாம் அனைவரும் ஒரே பூமியிலிருந்து வந்தவர்கள் என்பதை இது நினைவூட்டுகிறது. நம் முன்னோர்கள் ஒரு பொதுவான மரபணுவை பகிர்ந்து கொண்டனர் – அது ஒரு புள்ளியில் தொடங்குகிறது – வியாபித்து உலகமெங்கும் வேர்விடுகிறது – நகர வாழ்வில் சிறுமித்து – “சிறிய குடும்பம்” – உணர்வுகள் வேரறாது பயணிக்கிறது.

நாம் கதைகளின் மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கிறோம். சில மறைக்கப்பட்டவை, சில மறுக்கப்பட்டவை, மற்றவை ஆழ்ந்த ஏக்கத்தால் நிறைந்தவை. படைப்பாளிக்கும் பார்வையாளருக்கும் குடும்பக் கதை – உணர்வின் உரையாடலாடக உள்ளது.

இந்த கண்காட்சி ஓர் தொடர் சங்கிலித் தொடராக 2024-ல் “நாங்கள் ஒரு குடும்பம்” என்ற தலைப்பில் கரேபியத்தீவன – குவாடலூப் தீவிலும், பின்னர் 2025ல் “கூட்டு குடும்பம்” என்ற தலைப்பில் பிரான்ஸின் மத்தியில் புர்கோஞ் (Bourgogne) என்ற நகர சபையிலும், தொடர்ந்து பாரிஸ் தலைநகரில் 2026ல் “குட்டி குடும்பம்” என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்களின் காண்பியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வின் நிலப்பரப்புகள் மாறினாலும், நாம் தொலைதூரங்களுக்கு இடம்பெயர்ந்தாலும், பிணைப்பின் ஆன்மா நிலைக்கிறது குடும்பம் எனும் பந்தத்தில், நாம் வெறும் தனிநபர்கள் அல்ல, நாம் ஒரு குடும்பம் என்பதை இந்த காண்பியம் காட்சிப்படுத்தி இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button