இலக்கியச்சோலை

தமிழக எழுத்தாளமைகளின் ஈழப் போரிலக்கிய வகிபாகம் …  பொன்ராஜ் தங்கமணி

போர் இலக்கியத்தில் தமிழக உரிமைக் குரல்கள் எனும் இந்த நூல், ஆசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் பல காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கும் ஒரு நூலாகும். தன் எழுத்துப் பயணத்தின் பல்வேறு தருணங்களில் உருவான சிந்தனைகள், விமர்சனங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை மறக்காமல் பதிவு செய்து, அவற்றை ஒரு ஆவணமாக மாற்ற வேண்டும் என்ற ஆசிரியரின் முயற்சி இந்த நூலில் தெரிகிறது.

இந்த கட்டுரைகளில், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்காக குரல் கொடுத்த கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு ஆசிரியர் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளார். அவர்கள் எழுதிய படைப்புகள், அவர்கள் வெளிப்படுத்திய அரசியல் நிலைப்பாடுகள், ஈழத் தமிழருக்காக அவர்கள் குரல் கொடுத்த துணிச்சலான குரல்கள் ஆகியவற்றை இக்கட்டுரைகளில் விரிவாக மேற்கோள் காட்டியுள்ளார்.

இதன் மூலம் தமிழ் சினிமா உலகின் கலை இலக்கிய உலகம் ஈழப் போராட்டத்துடன் கொண்டிருந்த உறவை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைத்து ஆவணப்படுத்துகிறார்.

மேலும், இந்த நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கவிஞர்கள், கலைஞர்கள் பற்றிய பின்னணி தகவல்கள், அவர்களின் அரசியல் சார்புகள், அவர்களின் படைப்புகளின் வரலாற்றுப் பின்னணி போன்றவற்றை எடுத்துரைத்து வாசகர்களுக்கு ஒரு நல்ல தகவல் திரட்டாக அளிக்கிறார்.
இந்த கலை ஆளுமைகளைப் பற்றி அறியாத புதிய தலைமுறைக்கு, இந்நூல் ஒரு புதிய அறிமுகமாகவும் அமையும்.

இந்நூலில் இலக்கியக் கட்டுரைகளோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவைச் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 1970–1980களில் தமிழ் வாசகர்களின் மனதை கவர்ந்த முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்ற கிராபிக் நாவல்களைப் பற்றிய கட்டுரை, அந்தக் காலத்தை அனுபவித்தவர்களுக்கு இனிய நினைவுகளை மீட்டெடுக்கும். மேலும் வரலாற்றால் மறந்து கொண்டு வரப்படும் குயிலி, சுந்தரலிங்கம் போன்றவர்களின் வாழ்வையும் மீண்டும் நினைவுபடுத்துகிறார்.

ஐங்கரனின் எழுத்துக்களைப் பற்றி முன்பே அறிந்திருக்கும் வாசகர்களுக்கு, இந்த நூல் அவரது சிந்தனைகளின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இருக்கும். அதேசமயம், புதிய வாசகர்களுக்கு, அவரது எழுத்து உலகின் பலதரப்பட்ட பார்வையை அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த தொடக்கமாகவும் அமையும்.

அவரது இந்த எழுத்து முயற்சி மூலம் தன்னுடைய சமூகப் பொறுப்பு, வரலாற்று உணர்வு, நல்ல விடயங்களை ஆவணப் படுத்த வேண்டும் என்கிற அக்கறையையும் அறியலாம்.

இந்த நூல், கலை, இலக்கியம், அரசியல், வரலாறு ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் தமிழ் சமூகத்தின் அனுபவங்களைப் பதிவு செய்யும் ஒரு ஆவணமாக திகழ்கிறது.

ஐங்கரன் அவர்களின் எழுத்து முயற்சிகள் பரந்துபட்ட வாசகர்களிடம் சென்றடைய இனிய வாழ்த்துகள்.

பொன்ராஜ் தங்கமணி
தமிழ்நாடு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button