முச்சந்தி

89 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி யாழில் இப்படி ஒரு நிலையா?

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் உள்ள சகாயபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளவாய்க்கால் 89 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாமல் உள்ளது.

மழை காலங்களில் வெள்ளம் ஓட முடியாமல் குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்து வீடுகள், மலசலகூடங்கள், கிணறுகள் போன்றவற்றில் வெள்ளம் நின்று பல நாட்களின் பின்னர் தான் வற்றுகின்றது. அது மட்டுமல்ல இந்த வெள்ளவாய்க்கால் வீதியால் ஒவ்வாரு நாளும் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போது வெள்ள ஆடைகள் நனைந்தும் சேறுகள் படிந்தும் செல்லும் அவலநிலை காணப்படுகின்றது. அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள், பெரியோர், சிறியோர் எனப் பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் மக்கள் சார்பில் குநிப்பிட்ட நபர் ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் சண்டிலிப்பாய் பிரதேச சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனினும்

பிரதேச சபையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக இவ்வீதி திருத்தம் செய்வது தொடர்பாக  எந்தவித மான கோரிக்கைக் கடிதமும் தம்மிடம் இல்லை என்று பிரதேசசபையின் தெரிவித்துள்ளனர்.  பின்னர் மீண்டும் அந்தக் கடிதத்தினை  அவர்களிடம்  கொடுத்து திகதியிட்டு பிரதியினை  குறிப்பிட்ட நபர் பெற்றுக்கொண்டார். அதற்குப் பின்னரும் பிரதேச சபை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து தகவலறியும்  சட்டமூலமாக  இது தொடர்பில் கேட்டறிந்தபோது, குறித்த வீதி புனரமைப்பு தொடர்பில் சபையின் திட்டமொழிவில் உள்ளடக்கப்பட்டும் நிதி ஏற்பாடு மேற்கொள்ளப்படாததால் புனரமைக்கப்படவில்லை. அத்துடன் குறித்த வீதி புனரமைப்பு தொடர்பான கோரிக்கை கடித பிரதிகள் அலுவலகத்தில் இல்லை என தகவல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உள்ளூராட்சி ஆணையாளருக்கும் இது தொடர்பில் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கையை அடுத்து குறித்த வீதியில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை தற்காலிகமாக நீர்ப்பம்பி மூலம் அகற்றுமாறும் மேலதிக புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதேச சபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக  வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் பிரதேசசபையினரால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. எனவே எமது இந்த நிலையைக் கருத்திற்கொண்டு எமது வீதியைப் பார்வையிட்டு புனரமைக்க ஆவன செய்யுமாறு மீண்டும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

89 வருட காலமாக பொதுமக்கள் இவ்வாறு அவலநிலையில் இருப்பதை கடிதம் மூலம் பல தடவைகள் சண்டிலிப்பாய் பிரதேசசபைக்குத் தெரியப்படுத்தியும் பிரதேச சபை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button