ஜனாதிபதி கூறியது போல் அவரிடம் விசாரியுங்கள்; நாமல் ராஜபக்ச வலியுறுத்து

2.5 மில்லியன் டொலர் திறைசேரி கடன் திசைதிருப்பப்பட்ட விவகாரத்தை வெறும் “தொழில்நுட்ப சிக்கல் ” என்று கூறி கடந்துவிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.
இது 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ், பொது நிதிப் பொறுப்புக்கூறல் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இச்சட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகிய இருவருக்குமே இதில் நேரடிப் பொறுப்பு உள்ளது.
சட்டத்தின் 4 மற்றும் 28 ஆகிய பிரிவுகளின்படி, நிதி மேற்பார்வை மற்றும் செலவின வாரண்டுகளை (Expenditure Warrants) அங்கீகரிக்கும் பொறுப்பு நிதி அமைச்சருக்குரியதாகும்.
சட்டத்தின் 5, 29 மற்றும் 36 ஆகிய பிரிவுகளின்படி, செயல்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட பொது நிதி அமைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பு திறைசேரி செயலாளருக்குரியதாகும்.
பாதுகாப்பற்ற கணினி கட்டமைப்பு குறித்து ஏற்கனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், பொது நிதியைக் கையாள அதே கட்டமைப்பே பயன்படுத்தப்பட்டிருந்தால், கொள்கை அனுமதியையும் நிர்வாகச் செயல்பாட்டையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது.
எனவே, கொள்கை மற்றும் நிர்வாகம் ஆகிய இரு மட்டங்களிலுமான பொறுப்புக்கூறல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக நிலைத்தன்மைக்குக் கிடைத்துள்ள ஒரு சோதனையாகும்.
பகிரங்கமாக அறிவிக்கப்படும் பொறுப்புக்கூறல் தரநிலைகள், முறையாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையில் பெயர்கள் வெளிவரும்போதும் சமமாகப் பயன்படுத்தப்படுமா?
விசாரணையின் போது ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டால், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என கடந்த மே 12 அன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் பெயர் வந்தாலும் வாக்குமூலம் பெறப்பட வேண்டும், சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்ற அந்தக் கொள்கை, இந்த விவகாரத்திலும் எவ்வித தாமதமும் விதிவிலக்குகளும் இன்றி சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் வலியுறுத்தியுள்ளார்.
![]()