அரசியல் பத்தித்தொடர்…. சொல்-51… சொல்லித்தான் ஆகவேண்டும்…. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

‘இலங்கைக்கான உள்ளக சுயநிர்ணயம் : பேச்சுக்களைத் தாண்டிய நடைமுறைவழி’ எனும் தலைப்பில் ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா ‘அரங்கம்’ மின்னிதழில் ஏப்பிரல் 30, 2026 அன்று பதிவிட்டிருந்த கட்டுரை படித்தேன்.
இக்கட்டுரையில் ஒரேயொரு பந்தியைத்தவிர ஏனைய பந்திகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவும் கருத்தியல்ரீதியாகவும், அரசியல் கோட்பாட்டுரீதியாகவும் எனக்கு உடன்பாடானவேயே. அவையாவும் தமிழர்தம் அரசியல் தரப்பும் அரசாங்கத் தரப்பும் என இருதரப்பாருமே கவனத்தில் கொள்ள ணே;டிய நுட்பமான விடயங்களாகும்.
ஆனால், ஏற்கெனவே இங்கு நான் குறிப்பிட்ட எனக்கு உடன்பாடில்லாத ‘ஒரேயோரு பந்தி’ குறிப்பிடப்பட்டிருந்த விடயம் பற்றி இப்பத்தியில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.
அந்த ‘ஒரேயொரு பந்தி’ பின்வருமாறு உள்ளது.
‘விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு தெளிவாக இருந்தது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழர்தாயகத்தில் கணிசமான பிராந்திய சுயாட்சி மற்றும் சுய நிர்வாகத்தை வழங்கும் அரசியல் கட்டமைப்பை சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம் என்பதே அவர்கள் கூறிய சாரம். ஆனால் இத்தகைய உள்ளக உரிமைகள் நிராகரிப்பட்டால், வெளியக சுயநிர்ணயம் குறித்துச் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதும் அதே அரசியல் தர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த ‘ஒரேயொரு பந்தி’யோடுதான் கருத்தியல்ரீதியாக நான் முரண்பட வேண்டியுள்ளது.
கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை நிலைபாடுகள் ஒருபோதும் தெளிவாக இருந்ததில்லை. அதாவது நேர்மையாக இருந்ததில்லை. புலிகளைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் எப்போதுமே தமது அடுத்த கட்ட யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கான வழங்களைப்பெறும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதாகத்தான் இருந்திருக்கின்றன.

சகோதரப்படுகொலையிலிருந்து ஆரம்பித்து இந்திய அமைதி காக்கும் படையுடன் யுத்தம் தொகுத்ததிலிருந்து ஒஸ்லோ பேச்சுவார்த்தைவரை தம்மீதான நம்பகத்தன்மையை ஒருபோதும் புலிகள் நிரூபித்ததில்லை.
மேலும், மேற்படி ‘ஒரேயொரு’ பந்தியின் உள்ளடக்கத்தொனி புலிகளின் வன்முறை அரசியலை நியாயப்படுத்துவதாக அல்லது புலிகளைத் தடவிக்கொடுப்பதாக உள்ளது.
அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் தொடங்கி 2002 உள்ளக சுயநிர்ணயம் குறித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரையிலான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே சீரழித்தது.
இந்தியா – இலங்கை சமாதான ஒப்பந்தம் வருவதற்கும் அதனை அமுல் செய்வதற்கும் பங்களித்த முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் அ.அமிர்தலிங்கம் – முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபி.ஆர்.எல்.எம்) யின் செயலாளர் நாயகம் பத்மநாபா – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோரைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே கொலை செய்தது என்பது பகிரங்கவெளியில் எல்லோருக்கும் தெரிந்ததொன்றாகும்.
தமிழ்மக்களை வாழவைக்கவேண்டும் என்பதைவிடத் தமிழ் மக்களைத் தான் (மட்டுமே) ஆளவேண்டுமென்ற பிரபாகரனின் தன்முனைப்பு உளவியலே இவற்றிற்கெல்லாம் காரணமாகும்.
இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்க்காமலும் இந்திய அமைதிகாக்கும் படையுடன் யுத்தம் செய்து இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாமலும் ஒப்பந்தத்தை அரசியல்ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அனுசரித்தும் போயிருந்தால் இன்று ஐக்கிய இலங்கைக்குள் வடக்குகிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய ஒற்றை மொழிவாரி மாகாண அலகு அமுலிலிருந்திருக்கும். இதனை அரசியல் ஞானமுள்ள எவரும் மறுப்பாரில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளைச் சிங்களச்சமூகமோ – இலங்கை அரசாங்கமோ – இந்திய அரசாங்கமோ – சர்வதேச சமூகமோ ஏற்றுக்கொள்ளும் சாதகமான சூழ்நிலை இன்று இல்லை.

இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் எந்தக் கோரிக்கையும் புலிகளை முன்னிலைப்படுத்தி – புலிகளை நியாயப்படுத்தி – புலிகளைத் ‘தாஜா’ பண்ணி – புலிகளைத் தடவிக்கொடுத்து முன்வைக்கப்படுமானால் மேற்கூறப்பெற்ற சக்திகளின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை. இதுவே இன்றைய அரசியல்கள யதார்த்தம். ஆதலால் புலிகளின் பழைய பராக்கிரமங்களைப் பற்றிப் பேசுவதால் பலனில்லை.
எனவே, புலிகளின் வாடை வீசாத ஓர் அரசியல் செல்நெறி சார்ந்த செயற்பாடுகளே இன்றைய களநிலையில் நேர்மறைக் கணியங்களைக் கொண்டுவரும். தமிழ்ப் புத்தஜீவிகள் இதனை உணர்ந்து செயற்படுவார்களாக.
![]()