ஏன் விஜய் ஆட்சி செய்ய வேண்டும்?… நியூசிலாந்து சிற்சபேசன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1967, 1977 என்ற வரிசையிலே 2026ம் ஆண்டும் வரலாற்று ஆண்டாகியிருக்கின்றது. ஆண்ட பரம்பரையின் அதிகாரக்கனவு உடைக்கப்பட்டிருக்கின்றது. ‘புலி வருகிறது’ என்னும் குரலை யாருமே பொருட்படுத்தவில்லை. ஆனால், மே 4ம் திகதி “விசில்” ஓசை ஓங்கி ஒலித்தபோது, “இரட்டைஇலை” வாடியது, “உதயசூரியன்” துவண்டது.
புதிய கட்சியொன்று ஆரம்பமாகி இரண்டு ஆண்டுகளேயாகும்.
கட்சிக் கட்டமைப்பு என்றால், “கிலோ என்ன விலை?” என்று கேட்கும் நிலையையே காணமுடிகின்றது. ஆனால், கட்சித் தலைவரின் பிம்பம் மட்டும் பிரமாண்டமாகக் கட்டமைக்கப்பட்டது.
“ஓட்டுக்குள் சுருங்கிக்கொள்ளும் நத்தையாகவே” கட்சித்தலைவர் காணப்படுகின்றார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை. நேர்காணல்களை வழங்குவதில்லை.
மக்கள் பிரச்சினைகளிலே கரிசனையை வெளிப்படுத்துவதில்லை. மக்களை இயல்பாகச் சந்திப்பதில்லை. ஆகக்குறைந்தது, கரூரில் துக்கம் விசாரிப்பதற்குக்கூடப் போகவில்லை.
தேர்தல் பிரசாரத்துக்கு முழுமையாகச் செல்வதில்லை. சென்றாலும்கூட, முழுமையாகப் பிரச்சாரத்தை முடிப்பதில்லை.
![]()
ஆனாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் பிரமிக்கத்தக்க வெற்றியை, முதலாவது தேர்தலிலேலேயே, பெற்றிருக்கின்றார்.
எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலே, ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடவில்லை. ஆனாலும், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டாகப் பெற்றதிலும், இரண்டு அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
விஜய்யுடைய வெற்றியைத் தமிழகம் தழுவியதாகவும் சொல்லலாம். விதிவிலக்காக, அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களிலும், விழுப்புரம் போன்ற வடமாவட்டத்திலும் ஒரு தொகுதியிலே கூட வெற்றி பெறமுடியவில்லை.
பொதுவாக, தமிழகத்திலே பிரதேசவாரியாகவும், சாதிவாரியாகவுமே தேர்தல் முடிவுகள் நிர்ணயமாகின்றன.
உதாரணத்துக்கு சொல்வதெனில், தலைநகர் சென்னை, டெல்டாமண்டலம் போன்றவை திமுகவின் கோட்டையாகும். வடமாவட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சியே வசப்படுத்தியிருந்தது. கொங்குமண்டலம், தென்மாவட்டங்கள் போன்றவை அண்ணா திமுகவின் வாக்குவங்கியாகும். அதேபோன்று, கவுண்டர், முக்குலத்தோர், நாடார், தலித் எனச் சாதிவாரியான கணக்குகளும் உண்டு.
இவ்வாறான சமன்பாடுகளை விஜய்யின் வரவு தகர்த்திருக்கின்றது.
ஊர், பாலினம், வயது, சாதி போன்றவற்றையெல்லாம் கடாசிவிட்டு “விஜய்யிஸத்தை” மட்டுமே மக்கள் வரித்துக்கொண்டுள்ளனர்.
அதனூடாக, பிரமாண்டமான வெற்றியை விஜய்க்கு வழங்கியுள்ளனர். ஆனாலும்கூட, “கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத” வகையிலான வெற்றியாகவே அமைந்துவிட்டது.
தமிழக சட்டமன்றத்திலே ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாகும். சபாநாயகர் நியமனத்தையும் கவனத்தில் கொள்ளும்போது, மேலதிகமாக பதினோரு தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தால் “விஜய்யிஸம்” விஸ்வரூபம் எடுத்திருக்கும் என்றே தோன்றுகின்றது.
அதனாலேயே, “கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்” என விஜய் தரப்பு பாடிக்கொண்டே, “கால்குலேட்டரும், பேப்பருமாக” கூட்டல் கழித்தல் கணக்குகளிலே “பிஸி”யாகியுள்ளது.
தேர்தலுக்கு முன்னரே விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் கனவுகளோடு உலாவிய காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு தேர்தல் முடிவு “அல்வா” ஆகியதிலே ஆச்சரியமில்லை. ஐந்து எம்எல்ஏக்களுடன், விஜய்யுடன் சேர்ந்து “அமைச்சராக” காங்கிரஸ் “ரெடி” ஆகிவிட்டது. அகில இந்திய அளவிலான, “இண்டியா” கூட்டணியின் எதிர்காலம் தொடர்பிலெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
அண்ணா திமுக தடுமாறுகின்றது. தேர்தல் முடிவு வெளியாகியபின்னர், எடப்பாடி பழனிச்சாமியின் குரலை அதிகம் கேட்க முடியவில்லை. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி போன்றோர் “குத்தி முறிவதான” தோற்றமே ஏற்படுகின்றது.
திமுக, அண்ணா திமுக, பாஜக தவிர்த்து, பாமக அன்புமணியிடம் 4 ஆசனங்களும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்கசிய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகியவற்றிடம் தலா 2 ஆசனங்களும், விஜயகாந்தின் தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக ஆகியவற்றிடம் தலா 1 ஆசனமும் உள்ளன.
இந்தக் கட்சிகளைக் கூட்டணிக்கு கொண்டுவருவது, ஆடு – புற்கட்டு – புலி ஆகியவற்றுடன் ஆற்றைக்கடக்கத் திணறிய படகோட்டியின் கதையையே நினைவுக்கு கொண்டுவருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி என்டிஏ கூட்டணியில் உள்ளது. அதனால், காங்கிரஸ் சேர்ந்துள்ள கூட்டணியில் சேருமா?, பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒரே மேசையில் அமருமா? போன்ற கேள்விகளுக்குக் காலம்தான் பதில்சொல்லவேண்டும். அப்படியே, கூட்டணி அமைந்தாலும், பாமக, விசிக போன்ற கட்சிகளைக் கையாள்வது “நித்திய கண்டம், பூரண ஆயுசு” போலாகலாம்.
ஏதோவொரு வகையிலே ஆட்சி அமைந்தாலும், விஜய்யின் ஆட்சி விடைதெரியாத புதிராகும்.
தனக்கு வெளியே, தன்னைத்தவிர உலகமே இல்லை என்பதான மனப்பாங்கையே விஜய்யிடம் காணமுடிகின்றது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவரிடம் காணமுடியவில்லை. மிகுந்த தன்முனைப்பு உள்ளவராகவே தென்படுகின்றார்.

அரசியல் அனுபவம் இல்லை. நேரடி மக்கள் தொடர்பாடல் இல்லை.
இத்தகைய ஒருவரினால், மாநில முன்னேற்றத்துக்கு அதிகபட்சம் என்ன செய்துவிட முடியும்? என்ற கேள்வியை எளிதில் கடந்து போகமுடியவில்லை.
எதுஎப்படியாகிலும், பெருவாரியான மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
லஞ்சலாவண்யம் ஒழிந்து “மாற்றம்” வராவிட்டாலும் பரவாயில்லை. ஆறு சிலிண்டராவது இலவசமாகக் கிடைக்கவேண்டும். சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். ஒரு சவரன் தங்கமும், பட்டுப் புடவையும், மாதம் 2500 ரூபாயுமாவது கிடைக்கவேண்டும். அதற்காகவேனும், விஜய் ஆட்சி செய்யவேண்டும்.

![]()