இலங்கை

ஆழியவளையில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்; உடமைகள் சேதம்!

வடமராட்சி கிழக்கு, ஆழியவளைப் பகுதியில் நேற்று (03) நள்ளிரவு வீடு புகுந்த இருவர் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலில் வீட்டின் உடமைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஆழியவளைப் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை இலக்கு வைத்து மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தப்பியோடி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தப்பியோடிய இளைஞனை மீண்டும் அழைத்து வருமாறு கோரி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள், வீட்டின் உடமைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அத்துடன் அருகிலுள்ள வீட்டிற்கும் சேதம் விளைவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள மருதங்கேணி பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button