முதல் தனியார் தங்க சுரங்கம்

ஆந்திர பிரதேசத்தில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. கர்நூல் மாவட்டத்தின் ஜொன்னகிரி பகுதியில் அமைந்துள்ள இந்தச் சுரங்கம், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் தொடங்கப்படும் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுகிறது.
ஏறக்குறைய 600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ‘டெக்கான் கோல்ட் மைன்ஸ்’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்தச் சுரங்கம், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1,000 கிலோ கிராம் தங்கம் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இப்பகுதியில் சுமார் 42,500 கிலோ கிராம் வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுரங்கத்தில் தங்கம் எடுப்பதற்கான தொடக்கநிலைச் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. முழுமையான உற்பத்தி தொடங்கியதும், முதற்கட்டமாக ஏறக்குறைய 750 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறந்தவெளிச் சுரங்கமான (Open-cast mine) இங்கு, நிலத்தின் மேற்புறத்திலிருந்து குழிதோண்டித் தங்கம் எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாறைகளைப் பொடியாக்கித் தங்கம் பிரித்தெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம், இவ்வருடம் மே மாதத்திற்குள் முழுமையான வணிக உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜொன்னகிரி திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
![]()