கம்போடியாவைச் சுடுகாடாக்கிய போல் பாட் : வரலாற்றின் கறுப்புப் பக்க கண்ணீர் கதை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

( 51 வருடங்களுக்கு முன்னர் 1975, ஏப்ரல் 17இல் கம்போடியாவின் தலைநகர் நாம் பென் (Phnom Penh) நகரத்தை கெமர் ரூஜ் படைகள் கைப்பற்றின. நீண்ட நாட்களாக நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததென்று மக்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி சில மணிநேரங்கள் கூட நீடிக்கவில்லை)
வரலாற்றின் கறுப்புப் பக்கங்களின் கண்ணீர்க் கதையே, ஒரு நாடு நாற்பது மாதங்களில் 20 லட்சம் பிணங்களை சுமந்த கம்போடியாவைச் சுடுகாடாக்கிய ‘போல் பாட்’டின் வரலாறு ஆகும்.

கம்போடியாவின் கண்ணீர் கதை வெறும் நான்கே வருடங்களில்
ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கைத் துடைத்தெறிந்த அந்தப் பயங்கரத்தின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிதான் போல் பாட் (Pol Pot).
வரலாற்றின் பக்கங்களில் ரத்தக் கறைகள் படிந்த அத்தியாயங்கள் பல உண்டு. ஹிட்லரின் யூத இனப்படுகொலை. அமெரிக்க அதிகார வெறி பிடித்த தலைவர்களால் வியட்நாமில் நடத்திய கோரத் தாண்டவங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு நாடே தன் சொந்த மக்களால், தன் சொந்த அரசாங்கத்தால் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், பிரம்மாண்டமான சுடுகாடாகவும் மாற்றப்பட்ட ஒரு கோர வரலாறு உண்டென்றால், அது கம்போடியா நாட்டின் கதைதான்.
இது ஒரு தனிமனிதனின் பைத்தியக்காரத்தனமான, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு சித்தாந்தம், ஒரு தேசத்தையே எப்படி அழிவின் விளிம்பிற்குக் கொண்டு செல்லும் என்பதற்கான மிகச்சிறந்த, மிகக்கொடூரமான உதாரணமே கம்போடிய வரலாறு ஆகும்.
ஒரு சர்வாதிகாரியின் உருவாக்கம்
சலோத் சார் (Saloth Sar) 1925இல் கம்போடியாவில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். இவனது இளமைக்காலம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. மேல்படிப்புக்காக 1949இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்றான்.
அந்த பாரிஸ் வாழ்க்கைதான் அவனது தலையெழுத்தையும், பிற்காலத்தில் கம்போடியாவின் தலையெழுத்தையும் மாற்றியது. அங்கே அவனுக்குக் கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தான். ஆனால், மார்க்ஸ் அல்லது லெனின் சொன்ன கம்யூனிசத்தை அவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
அவனுக்கென்று ஒரு விபரீதப் புரிதல் இருந்தது. படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 1953-ல் கம்போடியா திரும்பினான். அங்கே காடுகளில் மறைந்து வாழ்ந்த வட வியட்நாமிய கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தான். மெல்ல மெல்ல வளர்ந்து, ‘கெமர் ரூஜ்’ (Khmer Rouge) என்ற கம்போடிய கம்யூனிஸ்ட் போராளிகள் குழுவின் தலைவனானான். அவனது கட்சியின் பெயர் கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி’ (Communist Party of Kampuchea – CPK), அவனது ஆயுதக் குழுவின் பெயர் கெமர் ரூஜ். ‘போல் பாட்’ என்பது அவன் தனக்குத் தானே சூட்டிக்கொண்ட புனைபெயர் (இதன் அர்த்தம் ‘Political Potential’ என்ற பிரெஞ்சு வார்த்தையின் சுருக்கம் என்றும் சொல்வார்கள்).
விவசாய சொர்க்கம் – விபரீதக் கனவு:
போல் பாட்டின் கனவு மிகவும் விசித்திரமானது. அதே சமயம் ஆபத்தானது. அவன் கம்போடியாவை ஒரு முழுமையான, கலப்படமற்ற விவசாய நாடாக மாற்ற விரும்பினான். அவனது அகராதியில் ‘நாகரிகம்’ என்பதே ஒரு சாபமாக இருந்தது.
அவனது சித்தாந்தத்தின் படி, நகரங்கள் என்பவை தீமையின் இருப்பிடங்கள். பணம், சந்தை, கல்வி, மதம், குடும்ப அமைப்பு – இவை அனைத்தும் முதலாளித்துவத்தின் அடையாளங்கள் என்று அழிக்கப்பட்டன.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் விவசாயியாக மட்டுமே இருக்க வேண்டும். அனைவரும் சமம், அனைவரும் வயலில் உழைக்க வேண்டும். இந்தக் கற்காலச் சிந்தனையை நவீனக் காலத்தில் நடைமுறைப்படுத்த அவன் தேர்ந்தெடுத்த வழிதான் நரக வேதனை.
நரகத்தின் வாசல்கள் திறந்தன:
1975, ஏப்ரல் 17. கம்போடியாவின் தலைநகர் நாம் பென் (Phnom Penh) நகரத்தை கெமர்
ரூஜ் படைகள் கைப்பற்றின. நீண்ட நாட்களாக நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததென்று மக்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி சில மணிநேரங்கள் கூட நீடிக்கவில்லை.
போல் பாட் ஒரு வரலாற்று விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்தான். “Year Zero”. அதாவது, கம்போடியாவின் 2000 ஆண்டுகால வரலாறு இன்றோடு அழிக்கப்படுகிறது. இதுதான் புதிய சகாப்தத்தின் முதல் வருடம். இனி பழைய நாகரிகத்தின் எந்த எச்சமும் இருக்கக்கூடாது.
தலைநகரில் இருந்த சுமார் 20 லட்சம் மக்களையும் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறத் துப்பாக்கி முனையில் உத்தரவிட்டார்கள். அமெரிக்கா குண்டு போடப் போகிறது, மூன்று நாட்களில் திரும்பிவிடலாம் என்று பொய் சொல்லி மக்களை விரட்டினார்கள். இவ்வாறே இந்த மாபெரும் வெளியேற்றம் நடந்தது.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என யாரும் தப்பவில்லை. மக்கள் ஆடு மாடுகளைப் போல கிராமங்களை நோக்கி நடத்தப்பட்டார்கள். அந்தப் பயணத்திலேயே பசி, தாகம், நோயால் பல்லாயிரக்கணக்கானோர் வழியெங்கும் செத்து விழுந்தார்கள். நகரங்கள் மக்கள் வாழாமல் வெறிச்சோடின.
அறிவுக்கு எதிரான போர் :
போல் பாட்டின் புதிய ஆட்சியில், ‘சிந்திப்பது’ ஒரு மரண குற்றம். அவனுடைய பார்வையில் படித்தவர்கள், நகரவாசிகள், அரசு ஊழியர்கள், கலைஞர்கள், பிக்குகள் (துறவிகள்) எல்லோரும் புதிய சமூகத்திற்குத் தேவையற்றவர்கள், அல்லது எதிரிகள்.
கொடுமையின் உச்சகட்டம் என்னவென்றால், நீங்கள் ஒரு மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் அல்லது வழக்கறிஞர் என்றால் உங்களுக்கு மரண தண்டனை நிச்சயம். உங்களுக்குச் சொந்தமாகப் புத்தகம் இருந்தால் மரணம். நீங்கள் வெளிநாட்டு மொழி பேசினால் மரணம். ஏன் நீங்கள் கண்ணாடி (Spectacles) அணிந்திருந்தாலோ, உங்கள் கைகள் உழைக்காமல் மென்மையாக இருந்தாலோ, நீங்கள் படித்தவர் அல்லது முதலாளித்துவ வர்க்கம் என்று முத்திரை குத்தப்பட்டு அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அறிவை அழித்துவிட்டால், மக்களை அடிமைகளாக வைத்திருப்பது சுலபம் என்பது சர்வாதிகாரிகளின் பொதுவான விதி.
கூட்டுப் பண்ணை கொலை களங்கள்:
கம்போடிய நகரத்திலிருந்து விரட்டப்பட்ட மக்கள், ‘புதிய மக்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் கிராமங்களில் அமைக்கப்பட்ட கூட்டுப் பண்ணைகளில் (Collective Farms) அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்கள்.
பல இலட்சம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. குழந்தைகளைத் தனியாகப் பிரித்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. பெற்றோரைக் காட்டிக் கொடுக்கும்படி குழந்தைகள் பழக்கப்படுத்தப்பட்டார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரக் கடுமையான விவசாய உழைப்பு. உணவோ, ஒரு கரண்டி அரிசிக் கஞ்சி மட்டும்தான். பட்டினியால் மக்கள் எலும்புக்கூடுகளாக மாறினார்கள்.
அத்துடன் மதம் தடை செய்யப்பட்டது. கோயில்கள் இடிக்கப்பட்டன அல்லது பன்றித் தொழுவங்களாக மாற்றப்பட்டன. சின்னத் தவறு செய்தாலும், அல்லது சோர்ந்து போய் அமர்ந்தாலும் சித்திரவதைதான்.
கெமர் ரூஜ் படைகளின் ஒரு புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு: உன்னை உயிரோடு வைத்திருப்பதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை, உன்னை அழிப்பதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. கம்போடியா முழுவதும் இப்படி மக்களைக் கொன்று குழிதோண்டிப் புதைத்த இடங்கள் ‘கெமர் ரூஜ் கொலைக்களங்கள்’ என்று இன்றும் அழைக்கப்படுகின்றன.
பல இடங்களில் துப்பாக்கித் தோட்டாக்களின் விலையை மிச்சப்படுத்த, மண்வெட்டி, கடப்பாரை போன்றவற்றைக் கொண்டே மக்களைக் கொடூரமாகக் கொன்றார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
S 21: மரண தொழிற்சாலை (Tuol Sleng)
போல் பாட் ஆட்சியின் குரூரத்திற்கு ஒரு சாட்சி வேண்டுமென்றால், நாம் பென் நகரில் உள்ள ‘எஸ்-21’ என்ற இடத்தைப் பார்க்க வேண்டும். அது ஒரு காலத்தில் பள்ளிக்கூடம். ஆனால், போல் பாட் ஆட்சியில் அது ஒரு சித்திரவதைக் கூடமாக மாற்றப்பட்டது.
இங்கே கொண்டுவரப்பட்டவர்கள் கற்பனைக்கு எட்டாத சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தாங்கள் செய்யாத குற்றங்களை, அதாவது சிஐஏ உளவாளி என்றோ, வியட்நாம் உளவாளி என்றோ ஒப்புக்கொள்ளும் வரை அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின், அவர்கள் கொலைக்களங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இந்த எஸ்-21 சிறைக்குள் வந்த சுமார் 20,000 பேரில், உயிரோடு திரும்பியவர்கள் வெறும் 12 பேர் மட்டுமே என்றால் அந்தப் பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து, ஆவணப்படுத்தி, சித்திரவதை செய்து கொன்றார்கள். ஒரு பைத்தியக்காரத்தனமான அதிகார வர்க்கம் அங்கே செயல்பட்டது.
மீளாத துயரும் முடிவும்:
இந்த நரகம் சுமார் 3 வருடம் 8 மாதங்கள் நீடித்தது. இறுதியில், போல் பாட்டின்படைகள் அண்டை நாடான வியட்நாம் எல்லையில் தொடர்ந்து சீண்டலில் ஈடுபட, 1979-ல் வியட்நாம் படைகள் ( வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ) கம்போடியாவுக்குள் புகுந்து கெமர் ரூஜ் ஆட்சியைக் கவிழ்த்தன. போல் பாட் மற்றும் அவனது சகாக்கள் தாய்லாந்து எல்லையை ஒட்டிய அடர்ந்த காடுகளுக்குள் தப்பி ஓடினார்கள்.
வியட்நாம் படைகள் உள்ளே வந்தபோதுதான், கம்போடியாவில் நடந்த இனப்படுகொலையின் முழு பரிமாணம் உலகத்திற்குத் தெரிய வந்தது. சுமார் 15 முதல் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஒரு தலைமுறையே அழிந்து போயிருந்தது.
கிட்டத்தட்ட அப்போதைய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். நஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அதில் ஒருவர் நிச்சயம் பலியாகியிருப்பார். அதுதான் அந்த இனப்படுகொலையின் கோர முகம்.
வரலாற்றின் சோகம்:
ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் துயரம் என்னவென்றால், இவ்வளவு பெரிய இனப்படுகொலையைச் செய்த போல் பாட், கடைசி வரை எந்த ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் முன்பும் நிறுத்தப்படவில்லை. காடுகளில் மறைந்து வாழ்ந்து, கெமர் ரூஜ் குழுவுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகார மோதலில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு, 1998-ல் தன் 73-வது வயதில் இறந்து போனான். அது இயற்கையான மரணமா அல்லது தற்கொலையா என்பது இன்றும் மர்மம்.
கம்போடியாவின் வரலாறு கற்றுத்தரும் பாடம் மிக முக்கியமானது. ஒரு கட்டுக்கடங்காத அதிகாரம், ஒரு தவறான சித்தாந்தம், மற்றும் கேள்விகேட்க முடியாத ஒரு சூழல் – இவை மூன்றும் சேரும்போது, ஒரு நாடு எப்படித் தன் சுயநினைவை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் என்பதற்கு இதுவே சாட்சி. அந்த அப்பாவி மக்களின் நினைவுகள், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.
![]()