உலகம்

ஈரான் போர் தாக்கம் ; அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி

ஈரான் போர் காரணமாக உலகளவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது வரலாற்றில் சந்தித்திராத எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நீண்டதூரப் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் ‘ரோட் ட்ரெயின்கள்’ எனப்படும் பிரம்மாண்ட பாரவூர்திகள் டீசல் விலையேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

போருக்கு முன்னர் ஒரு லிட்டர் டீசல் 180.2 சென்ட் ஆக இருந்த நிலையில், தற்போது அது 312.7 சென்ட் ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 171 சென்ட்டில் இருந்து 240.1 சென்ட் ஆக அதிகரித்துள்ளது.

ஒரு பாரவூர்தியின் எரிபொருள் தாங்கியினை நிரப்புவதற்கு முன்னர் 3,600 அவுஸ்திரேலிய டொலர்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது 7,500 டொலர்கள் வரை செலவிட வேண்டியுள்ளது.

ஆரோன் பிஷர் போன்ற சிறு போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். “முன்னர் ஒரு மாதத்திற்கு 150,000 டொலர்கள் எரிபொருளுக்காகச் செலவிட்ட நான், இப்போது 300,000 டொலர்களைச் செலவிடுகிறேன்.

ஆனால், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் கிடைப்பதற்கு 60 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது,” என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் 1,200 கி.மீ நீளமான ‘நல்லார்பார்’ பாலைவனப் பாதையில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சில எரிபொருள் நிலையங்களுக்கு இடையே 200 கி.மீ தூரம் இடைவெளி உள்ள நிலையில், டீசல் இல்லாமை பாரவூர்தி ஓட்டுநர்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசியத் தேவைகளுக்காக எரிபொருளைச் சேமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், போக்குவரத்துத் துறைக்காக 1 பில்லியன் டொலர் வட்டியற்ற கடனுதவியையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், “வட்டியற்ற கடன்களும் ஒரு சுமையே” எனத் தெரிவிக்கும் பாரவூர்தி உரிமையாளர்கள், தமக்கு நேரடி பண உதவியோ அல்லது எரிபொருள் விலை குறைப்போ அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *