பலதும் பத்தும்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் வெற்றி

10 நாட்கள் நிலவை ஆய்வு செய்த பிறகு, ஆர்டெமிஸ் 2 திட்ட வீரர்கள் இன்று அதிகாலை பத்திரமாக பூமி திரும்பினர்.

இதன்படி, அரை நூற்றாண்டுகளுக்குப் பின் வீரர்கள் நிலவுக்கு வெற்றிகரமாக சென்று விட்டு திரும்பி சாதனை படைத்துள்ளனர்.

சுமார் 53 ஆண்டுகளுக்குப் பின் ஆர்டெமிஸ் 2 எனும் விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் கடந்த 2ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து, நிலவுக்கு மிக அருகில், அதாவது 6,545 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்ற அவர்கள், மனிதக் கண்களால் இதுவரை பார்க்காத வகையிலான புகைப்படங்களை எடுத்து அனுப்பினர்.

பூமியிலிருந்து, 4,06,778 கி.மீ., தொலைவை அடைந்த அவர்கள், 1970ம் ஆண்டு அப்பல்லோ 13 திட்டத்தின் 4,00,171 கி.மீ., என்ற சாதனை துாரத்தை முறியடித்தனர். இது மனித குலத்தின் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாக அமைந்தது. நிலவைச் சுற்றி ஏழு மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வீரர்கள், இரண்டு புதிய பிரகாசமான பள்ளங்களை கண்டறிந்து, அதற்கு பெயர் சூட்டினர்.

இந்த நிலையில், 10 நாட்கள் ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ஆர்டெமிஸ் 2 திட்ட வீரர்களின் விண்கலம், இன்று அதிகாலை சான் டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கியது.

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு சென்று வந்த விண்வெளி வீரர்களின் சாதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அர்டெமிஸ் 3 பயணத்தில் விண்வெளி வீரர்கள் விண்கலத்தை இணைக்கும் பயிற்சிகளை மேற்கொள்வர். அர்டெமிஸ் 4 திட்டம் 2028ல் நிலவின் தென்பகுதியில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *