முச்சந்தி
பிரான்சில் இனவெறி எதிர்ப்பு போராட்டம்!…. இஸ்லாமோபோபியா இனியும் தொடருமா ?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

பிரான்சின் கலாச்சார சூழலில் முஸ்லிம் மற்றும் கருப்பின சமூகம் தங்களின் அடையாளத்தையும், பிரெஞ்சு குடியரசின் சட்டங்களையும் சமநிலைப்படுத்தி வாழ முயற்சிக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், இன பாகுபாடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அது முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பதாகவும் புகார்கள் பல உள்ளன.
இதற்கு சான்றாக கடந்த வாரம் சென்ட்-டெனிஸ் நகர முதல்வர் பாலி பகாயோகோ என்பவருக்கு எதிரான இனத்துவேச கருத்துக்கள் பாரியளவில் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன. நகர முதல்வர் பாலி பகாயோகோ தலைமையில் திரண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. பிரான்சின் இரண்டாவது பெரிய புறநகர் நகரமான சென்ட்-டெனிஸின் நகர முதல்வர் பாலி பகாயோகோ (Bally Bagayoko), தமக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரம்மாண்டமான குடிமக்கள் பேரணி ஊடகங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இனவெறிக்கு இனி இடமில்லை

பாரிஸில் முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளது. அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரத்துடன் கலந்து வாழ்ந்தாலும், பொது வழிபாட்டு இடங்கள் பற்றாக்குறை, சமூக ஒருமைப்பாடு, மற்றும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின்
ரமலான் மாதத்தில் இப்தார் நிகழ்வுகள் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைகள் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன, அதே நேரத்தில், தெருவில் தொழுகை நடத்துவது மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன.
ஆயினும் இன்னமும் பிரான்சில் இன மத துவேச கருத்துக்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்ட்-டெனிஸில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நகர முதல்வராகப் பொறுப்பேற்ற பாலி பகாயோகோ, ‘சி-நியூஸ்’ (CNews) தொலைக்காட்சியில் மிகக் கடுமையான இனவெறி விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரை “குரங்கு இனத்தோடு” ஒப்பிட்டும், “ஆதிக்க ஆண் விலங்கு” (mâle dominant) என்றும் அந்த ஊடகத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்தச் செயல் பிரான்ஸ் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக சென்ட்-டெனிஸ் நகர மண்டபத்தின் முன்பாக நடைபெற்ற பேரணியில் 10,000 முதல் 20,000 பேர் வரை கலந்துகொண்டனர். இனவெறி, இஸ்லாமோபோபியா, யூத எதிர்ப்பு மற்றும் அனைத்து பாகுபாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற முழக்கங்கள் பேரணியில் ஓங்கி ஒலித்தன.
இந்த பேரணியில் நகர முதல்வர் பாலி பகாயோகோ பேசுகையில், இது எனக்காக எழுப்பப்பட்ட குரல் மட்டுமல்ல. புலம்பெயர்ந்தோரின் வாரிசுகளாக இருந்து இந்த நாட்டின் குடியரசு விழுமியங்களைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்குமான அபயக் குரல் (SOS) என்று உணர்ச்சிவசப்படத் தெரிவித்தார். அதேபோல், அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மௌனத்தையும் பகாயோகோ கடுமையாக விமர்சித்தார்.இந்தப் பேரணியில் ‘லா பிரான்ஸ் இன்சுமிஸ்’ (LFI) கட்சியின் தலைவர் Jean-Luc Mélenchon, Mathilde Panot, Sophia Chikirou போன்ற முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மெலஞ்சோன் பேசுகையில், பிரெஞ்சு வரலாற்றில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிகாரத்திற்கு வரும் தகுதியுள்ள நபர்களை அவர்களின் நிறத்தை வைத்து அவமதிக்கும் எலைட் வர்க்கத்தின் செயல் அருவருப்பானது என்று கடுமையாக சாடினார்.
சட்ட நடவடிக்கை அவசியம்
சோசலிசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இந்தப் பேரணியில் நேரில் கலந்துகொள்ளவில்லை. இந்த இனவெறி அவமதிப்பு தொடர்பாகப் பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மற்றும் உள்துறை அமைச்சர் லோரான் நுனேஸ் ஆகியோர் இந்தச் செயலைக் கண்டித்துள்ளதோடு, அரசின் சார்பில் சிவில் தரப்பாக (Partie civile) வழக்கில் இணைவதாகவும் அறிவித்துள்ளனர்.
தற்போது பிரான்சில் 2026 உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் இனவெறி மற்றும் அடையாளம் சார்ந்த விவாதங்களால் சூடுபிடித்துள்ளது. இந்தப் பேரணி, பாதிக்கப்பட்ட ஒரு மேயருக்கான ஆதரவு என்பதைத் தாண்டி, பிரான்சின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரும் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
பிரான்ஸில் முஸ்லிம் வருகை:
முதல் முஸ்லிம் காலடித்தடம் பிரான்ஸினுள் இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே பதிந்துவிட்டது. ஸ்பெயினைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் தென் பிரான்ஸையும் கிபி 759 வரைக்கும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பின்பு ஒஸ்மானிய ஆட்சிக் காலங்களில் 1543-44 ம் ஆண்டு காலப்பகுதியில் ஒஸ்மானியர்களின் கடற்படைத் தளமொன்றும் தூளுன் எனுமிடத்தில் இருந்தது. இதற்குத் தளபதியாக கைருத்தீன் பர்பரோஸா என்ற வட ஆபிரிக்க இனத்தவரொருவர் இருந்துள்ளார்.
இறுதியாக 1960 களில் பிரான்ஸின் குடியேற்ற நாடுகளிலிருந்து பாரிய தொழிலாளர் நகர்வுகள் இடம்பெற்றன. இவர்கள் பெருமளவு வட ஆபிரிக்கர்களாகவே இருந்தனர். எனினும் பாரிஸ் நகரில் முதல் முஸ்லிம் பள்ளிவாசல் 1922ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதுவே இன்று பிரான்ஸின் பாரிய முஸ்லிம் வழிபாட்டிடமாகக் காணப்படுகின்றது.
தற்போதய தரவுகளின்படி முழு பிரான்ஸிலும் 2000 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்
காணப்படுவதென்பது இஸ்லாமின் துரித வளர்ச்சியைக் காட்டுகின்றது. மேலும் அவர்கள் வருடாந்தம் ரமழான் நோன்பு போன்றவற்றை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். அத்துடன்
காணப்படுவதென்பது இஸ்லாமின் துரித வளர்ச்சியைக் காட்டுகின்றது. மேலும் அவர்கள் வருடாந்தம் ரமழான் நோன்பு போன்றவற்றை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். அத்துடன்பிரான்ஸிய முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் பிரதான இரு அமைப்புக்களாக “Federation of the French Muslims” (Fédération des musulmans de France), “Union of Islamic Organisations of France” (Union des organisations islamiques de France) ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். இதில் முதலாவது அமைப்பு மொரோக்கோ முஸ்லிம்களின் ஆதரவு அதிகம் உள்ள அமைப்பாகும்.
பிரான்ஸ் கலாச்சார சூழலில் முஸ்லிம்கள்
பிரான்சின் கலாச்சார சூழலில் முஸ்லிம்கள் மிக முக்கியமான, அதே சமயம் சிக்கலான ஒரு அங்கமாகத் திகழ்கின்றனர். பிரான்சில் இஸ்லாம் இரண்டாவது பெரிய மதமாக உள்ளது, இது பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொண்டுள்ளது.
பிரெஞ்சு முஸ்லிம்கள் முக்கியமாக வட ஆப்பிரிக்க அல்ஜீரியா, மொராக்கோ, துனிசியா, சஹாரா போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். 2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, பிரான்சில் உள்ள முஸ்லிம்களில் 76% பேர் மதம் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர். ரமலான் நோன்பு நோற்பது 70% முக்கியம் என்று கருதுகின்றனர். அதேவேளை வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிக்குச் செல்வது 23% என தரவுகள் உள்ளன.
மக்கள் தொகை பெருக்கத்தால் போதிய மசூதிகள் இல்லாததால், பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் தெருக்களில் தொழுகை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இது உள்ளூர் நிர்வாகத்துடன் மோதல்களை ஏற்படுத்துகிறது. ரமலான் மாதத்தில் பாரிஸ் தேசிய நூலகம் போன்ற இடங்களில் திறந்தவெளி இப்தார் சமூக நிகழ்வுகள் மூலம் முஸ்லிம்கள் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.
இதேவேளை 2009 முதல் 2020 வரை முஸ்லிம் பெண்களிடையே தலைக்கவசம் அணிவது 55% அதிகரித்துள்ளது என்று சில தரவுகள் கூறுகின்றன. முதிய தலைமுறையினர் தங்கள் சொந்த நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேண, இளம் தலைமுறையினர் பிரெஞ்சு கலாச்சாரத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
பிரான்சில் மதச்சார்பின்மை -Laïcité

பிரான்சின் மதச்சார்பின்மைக் கொள்கையின்படி பொது இடங்களில் மத அடையாளங்களைத் தடை செய்கிறது. இது அரசுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல்களை ஏற்படுத்துகிறது.
இஸ்லாத்தை ஒரு அரசியல் இயக்கமாகப் பார்க்கக் கூடாது என்பதிலும், வெளிநாட்டு தலையீட்டைத் தடுக்கவும் பிரான்ஸ் அரசு புதிய சட்டங்களை, குறிப்பாக பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஆனாலும் 2015 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான கண்காணிப்பு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. பாரிஸ் தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம் சமூகம் ஒருங்கிணைவதில் பல தடைகளை ஏற்படுத்தி, “scapegoating” எனப்படும் பலிவாங்கும் சூழலை உருவாக்கியது என்ற அச்சம் சமூகப் பாதிப்பை ஏற்படுத்தியதும் உண்மையே.
ஆனாலும் இதன் விளைவாக பிரெஞ்சு முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கும், பிரான்சின் மதச்சார்பற்ற கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கும் இடையில் ஒரு சவாலான சமநிலையை மேற்கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.
பிரான்ஸ் ஊடகங்களில் இனமுரண்

பிரான்ஸ் சஞ்சிகையான சார்ளி ஹெப்டோ மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிற்பாடு பிரான்ஸிய முஸ்லிம்கள் குறித்த நமது கவனம் அதிகரித்தது. இஸ்லாமிய மயமாகி வரும் ஐரோப்பாவில் இருக்கும் பெரிய சிறுபான்மைகளுள் ஒன்றாக பிரான்ஸ் சிறுபான்மை மக்களைக் கண்டு கொள்ள முடியும். அவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது ஐம்பது இலட்சங்கள் வரை இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. இது மொத்த சனத்தொகையில் 8% ஐ உள்ளடக்கியதாகும். அங்கு இன ரீதியாக மற்றும் மத ரீதியாக சனத்தொகைக் கணக்கெடுப்புக்கள் மேற்கொள்வது 1872ம் ஆண்டின் பின்னர் சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளதென்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸின் முஸ்லிம் சனத்தொகைக் கட்டமைப்பை 1999ம் ஆண்டு மேற்கொள்ளாப்பட்ட சுயாதீனக் கணக்கெடுப்பொன்றின் பிரகாரம் நோக்க முடியும். இஸ்லாம் பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாகும். அது கத்தோலிக்க மதத்துக்கு அடுத்த ஸ்தானத்திலிருக்கிறது. பாரிசில் வட ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு அடிப்படைக் காரணம் இந்நாடுகள் பிரான்ஸின் காலணித்துவ நாடாக இருந்தமையாகும்.
மேலும் அண்மைக்காலமாக பிரான்ஸிய சுதேச மக்களும் இஸ்லாமைத் தழுவும் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவர்களின் தற்போதைய தொகை 100,000 ஐத் தாண்டுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இது வருடாந்தம் ஆயிரக்கணக்கில் அதிகரித்துச் செல்கின்றது. இதுவும் பாரம்பரிய பிரான்ஸ் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

![]()