பலதும் பத்தும்

ஐரோப்பாவில் ‘கிட்காட்’ சாக்லேட் திருட்டு ; கடைகளில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

ஐரோப்பாவில் KitKat சாக்லேட் பெருமளவு சரக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, அதன் தயாரிப்பாளர் நெஸ்ட்லே தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கடைகளில் சாக்லேட் பற்றாக்குறை உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, புதிய வகை KitKat சாக்லேட் 4,13,793 துண்டுகள் கொண்ட லாரி ஒன்று ஐரோப்பாவில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது திருடப்பட்டுள்ளது.

சுமார் 12 டன் எடையுடைய இந்த சரக்கு, உற்பத்தி மையத்திலிருந்து விநியோக மையத்திற்குச் செல்லும் வழியில் கடந்த வாரம் காணாமல் போயுள்ளது.

திருடர்கள் அதை மிக நேர்மையாக எடுத்துக் கொண்டு 12 டன் சாக்லேட்டுடன் ‘பிரேக்’ எடுத்துவிட்டார்கள், “KitKat சாக்லேட்டுடன் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற தங்களின் பிரபல வாசகத்தை சுட்டிக்காட்டி நிறுவன பேச்சாளர் இந்த சமப்வத்தை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருட்டு காரணமாக, ஈஸ்டர் காலத்திற்கு முன்பாக கடைகளில் KitKat சாக்லேட் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.

திருடப்பட்ட லாரி மத்திய இத்தாலியிலிருந்து போலந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. வழியிலுள்ள பல ஐரோப்பிய நாடுகளில் இந்த சாக்லேட்டுகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

சரக்கு துல்லியமாக எந்த இடத்தில் காணாமல் போனது என்பது தெரியவில்லை. லாரியும் அதில் இருந்த பொருட்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடனும், விநியோகச் சங்கிலி கூட்டாளிகளுடனும் இணைந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

. மேலும், திருடப்பட்ட சாக்லேட்டுகள் அனுமதியற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சாக்லேட்டிலும் உள்ள தனிப்பட்ட ‘batch code’ மூலம் இந்த சரக்குகளை கண்டறிய முடியும் என்றும், அவை ஸ்கேன் செய்யப்பட்டால் உடனடியாக நிறுவனத்துக்கு தகவல் வழங்கும் வழிமுறைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *