இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்; கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள கொழும்பு ஆர். பிரேமதாச மைதான பகுதிகளிலும் மற்றும் மைதானத்தை சூழவுள்ள வீதிகளிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இதனை பார்வையிடுவதற்காக பெருமளவான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவிக்கையில்,

இந்திய – பாகிஸ்தான் போட்டிகளை பார்வையிட பெருமளவான ரசிகர்களும், வெளிநாட்டவர்களும் வரவுள்ளனர். இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளதால் போட்டி ஆரம்பமாக 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிற்பகல் 3 மணியில் இருந்து மைதானத்தின் பார்வையாளர் நுழைவாயில்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். பெருமளவானவர்கள் வரவுள்ளதால் வாகன தரப்பிடங்கள் தூர இடங்களிலும் அமையவுள்ளன. அங்கிருந்து மைதானத்திற்கு விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிப்பத்திரத்திற்கமை கெத்தாராம சந்தியூடாக வாகனங்களை செலுத்த முடியும். ஏனைய வாகனங்களுக்கு வேறு இடங்களில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன. அதாவது கிரேண்ட்பாஸ் மெட்டிபார்க் வாகன தரிப்பிடம், சதொச வாகன தரிப்பிடம், செபஸ்தியன் வாவி வாகன தரிப்பிடம், கோயில் தோட்டம் மற்றும் எபல்வத்த வாகன தரிப்பிடம், ரயில்வே திணைக்கள வாகன தரிப்பிடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு கடமையில் 400க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இங்கு விசேட சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறும்.

இதேவேளை போட்டி நடக்கும் நேரங்களில் வின்சன்பெரேரா மாவத்தை, பாபபுள்ளே பாலம் சந்தி, மல்வத்து பாலம் சந்தி, மாளிகாவத்தை குறுக்கு வீதி, கெத்தாராம வீதி சந்தி ஆகியன வாகன போக்குவரத்துக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதேபோன்று மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதன்போது பயணப்பொதிகள், தலைக்கவசம், மதுபானம், கண்ணாடி போத்தல்கள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் இசை கருவிகள், ஒலியெழுப்பும் கருவிகள் மற்றும் அவசியமற்ற இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். ஒவ்வொரு நுழைவாயிலும் சீசீரிவி ஊடாக கண்காணிக்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *