முச்சந்தி

சாதாரண சட்டத்திலேயே திருமலை பிக்குகள் கைது;  அவசரகாலச் சட்டத்தின் கீழ் அல்ல என்கிறார் பிரதமர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் கீழ் பிக்குகள் கைது செய்யப்படவில்லை.சாதாரண சட்டத்தின் கீழே அந்தப் பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் கீழ் பிக்குகள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சி எம்.பி. ஒருவர் இங்கு கூறினார் . இது முற்றிலும் தவறு . பொய்யானது . சாதாரண சட்டத்தின் கீழே அந்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறுகின்றார்கள்.எந்த ஊடகத்துக்கு எதிராக , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் , எந்த போராட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும்.

புதிய கல்வி மறுசீரமைப்பு நீக்கப்படவில்லை. தற்காலிகமாகவே பிற்போடப்பட்டுள்ளது. ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் எதனையும் மூடிமறைக்கவில்லை. எதிர்க்கட்சியினர் தான் இவ்விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கல்வி மறுசீரமைப்புக்கு பாரியதொரு எதிர்ப்பை ஏற்படுத்தி தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள். தற்போது தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கின்றார்கள்.

எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையானால் யார் போராட்டங்களை நடத்தியது?, யார் கதிர்காமத்துக்குச் சென்று தேங்காய் உடைத்தது? ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரன தொகுதி அமைப்பாளர் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை ஏற்பாடு செய்தார். கதிர்காமத்தில் தேங்காய் உடைக்கும் போது ‘ என்னை வீடியோ எடுக்க வேண்டாம், அந்த பக்கம், அந்த பக்கம்’ என்று சொன்னதை முழு நாடும் பார்த்தது.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் எதிர்ப்புக்களை தோற்றுவிக்கவில்லையா?கல்வி ஆபாசமாக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடவில்லையா?கல்வி ஆபாசமானது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெளிவு படுத்த வேண்டும்.ஆரோக்கியமான கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும். அதனை விடுத்து வதந்திகள் பற்றி பேசுவது பயனற்றது.

பாராளுமன்றத்தில் காலையில் அடிப்படையற்ற விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பிரதான பழக்கமாக எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியின் ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையிட்டு கவலையடைகிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *