பலதும் பத்தும்

நாங்க வெள்ளை; குழந்தை மட்டும் இப்படி?; DNA ரிப்போர்ட்டால் உறைந்த தம்பதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் மில்ஸ் மற்றும் டிஃப்பனி ஸ்கோர் தம்பதியினர், ஒரு கருத்தரிப்பு மையத்தின் (Fertility Clinic) அலட்சியத்தால் தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தம்பதிக்கு கடந்த டிசம்பர் 11-ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்த தம்பதியினர், குழந்தை தங்களைப் போல இல்லாமல் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர் (Non-Caucasian) போல இருப்பதை உணர்ந்துள்ளனர்.

மரபணு சோதனை செய்ததில், அந்தப் பெண் குழந்தைக்கும் இந்தத் தம்பதியினருக்கும் எந்தவிதமான உயிரியல் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

2020-ஆம் ஆண்டில் தாங்கள் சேமித்து வைத்திருந்த கருக்கள் (Embryos) வேறு ஒரு பெண்ணுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும், தங்களின் உண்மையான குழந்தை இப்போது யாரிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது அந்தப் பெண் குழந்தையை உயிருக்கு உயிராக நேசிக்கும் இந்தத் தம்பதியினர், அதே சமயம் அக்குழந்தையின் உண்மையான பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிப்பது தங்களின் கடமை என்று கருதுகின்றனர்.

ஆர்லாண்டோவில் உள்ள ‘IVF Life, Inc’ என்ற மருத்துவமனைக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் மரபணு சோதனைகளை மேற்கொள்ள ஒரு தற்காலிக உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

அதேசமயம் ஒருவேளை குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் கோரினால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அதுவரை குழந்தையைத் தாங்களே வளர்க்க விரும்புவதாகவும் அந்தத் தம்பதியினர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *