கவிதைகள்

ஏற்றிட வாழ்வார் எய்துவார் நலமே!…. கவிதை…. ஜெயராமசர்மா 

மூத்தோர்கள் வார்த்தை முழு மருந்தாகும்
பார்க்காதார் ஏற்காதார் படுப்பார்கள் துயரில்
ஏற்றிடுவார் விரும்பிடுவார் எழும்பிடுவார் வாழ்வில்
இதைமறவா இருந்திடுதல் எல்லோர்க்கும் நன்றே

அனுபவித்து அனுபவித்து அவருரைத்த அனைத்தும்
அகமிருக்கும் நோயினுக்கு அருமருந்தே யாகும்
மருந்தேற்க மறுத்தால் மாண்டிடுவோம் நோயில்
மாண்டவர் கோடி வேண்டாமே வினையே

மூத்தோர்கள் வார்த்தை இலக்கியமாய் இருக்கு
இலக்கோடு படித்தால் எத்தனையோ கிடைக்கும்
இலக்கினை அடையவே இயம்பினார் மூத்தோர்
எடுத்தவர் பிழைத்தார் எடுக்காதோர் வீழ்ந்தார்

வள்ளுவம் நாலடி ஒளைவையின் அறிவுரை
தெள்ளிய தமிழில் சிறந்திடும் ஒளடதம்
படிக்கிறோம் படிக்கிறோம் எடுக்கிறோம் சிலதை
முழுதுமாய் எடுத்தால் மூழ்கிடோம் நோயினுள்

 

 

 

 

 

 

 

ஆணவம் அகந்தை பெருநோ யாகும்
அன்பிலா அகமும் பெருநோ யாகும்
தீராத சினமும் செருக்கான சொல்லும்
வாழ்நாளில் எமக்குப் வாய்த்த பெருநோயே

ஒழுக்கந் தவறினால் உயிரிருந்தும் பயனா
ஒழுக்கமே வாழ்வின் உயிர்மூச்சு அன்றோ
வள்ளுவம் மொழிந்ததை மனமேற்கா விட்டு
வாழ்ந்திட நினைப்பார் மனிதரே இல்லை

கற்பினைப் பற்றி சொல்லிய அனைத்தும்
கருத்தினில் இருத்தா இருப்பது முறையா
மூத்தோர்கள் கற்பை முதலென நினைத்தார்
நாமதை காத்தல் நம்பெருங் கடனே

வாய்மை என்பது மாபெரும் சொத்து
வாழுவாது வாய்மையின் வழிசெலல் வேண்டும்
வாய்மை தவறின் வாழ்வே தவறும்
வள்ளுவப் பெரியார் வார்த்தை நல்மருந்தே

எப்படி வாழலாம் என்பதை மூத்தோர்
இயம்பிய வழியினில் வாழ்ந்திடல் நன்று
மூத்தோர் வார்த்தை அனைவர்க்கும் அவசியம்
ஏற்றிட வாழ்வார் எய்துவார் நலமே !

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

One Comment

  1. ‘ மூத்தோர் சொல்லும் முழுநெல்லிக் காயும் முன்னால் கசக்கும்; பின்னால் இனிக்கும்’ என்ற முதுமொழிக்காய் விளக்கக் கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *