இலங்கை

கிரான் பிரதேசத்தில் பல இடங்களிலும் தொல்பொருள் திணைக்களம் நாட்டிய பெயர் பலகைகள் பிடுங்கி வீசப்பட்டன

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடங்கள் என்ற பெயர் பலகை நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பிரதேச சபை தவிசாளர் சு.சுதாகரன் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கிரான் பிரதேசத்தில் குடும்பி மலை உட்பட்ட மலை பிரதேசங்கள் பழமை வாய்ந்த ஆலயங்கள் வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதிகளில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பிரதேச மக்கள்,சமூக ஆர்வலர்கள் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர்,உபதவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து,தங்கள் பிரதேச சபை எல்லைக்குள் தங்களது அனுமதி பெறப்படாது,தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இதன்போது திகிலிவெட்டை,சாராவெளி,பெண்டுகள்சேனை,முருங்கன் தீவு போன்ற இடங்களில் நாட்டப் பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன . தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அதற்றும் பணி இடை நிறுத்தப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏனைய பெயர் பலகைகளை அகற்றும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக தவிசாளர் சனிக்கிழமை இரவு தெரிவித்தார்.

பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மதம் , மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு இனத்திற்கு செய்யும் பெரும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த நடவடிக்கையினை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் தவிசாளர் தெரிவித்தார்.

திருகோணமலையில் அண்மையில் புத்தர் சிலை சட்டவிரோதமாக வைக்கப்பட்ட நிலையில்,தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை(21) வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று தொல்பொருள் திணைக்களத்தினரை துரத்தியடித்திருந்தனர்.

மேலும் மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளது. இவற்றை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்(இன்று) அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *