நாட்டில் ஒரு நாளைக்கு வடக்கிலேயே அதிக சைபர் குற்றங்கள்

நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகும் நிலையில் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின்யாழ் மாவட்ட எம்.பி ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்.பி. கேள்வி எழுப்புகையில்,
2020 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை நிதிக் கணினிக் குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கைப் பொலிஸுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்,
2020 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை நிதிக் கணினிக் குற்றச் செயல்கள் தொடர்பாக வட மாகாணத்தில் இலங்கைப் பொலிஸுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்
வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உத்தியோகபூர்வ கணினிக் குற்றச்செயல்களை அறிக்கையிடும் தளங்கள் அல்லது பொலிஸ் கணினிக் குற்றப் பிரிவுகளில் இணையவழி வங்கி மோசடிகள், போலி மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத இலத்திரனியல் பணப்பரிமாற்றம் போன்ற குறிப்பிடும்படியான நிதி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் மாவட்ட வாரியாக வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
கிராமிய மற்றும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக வடமாகாணத்தில் நிலவும் நிதிக் கணினிக் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான பொதுமக்களின் அணுகலை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் இச்சபைக்கு அறிவிப்பீர்களா இன்றேல், ஏன்?எனக்கேட்டார்
இக்கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளிக்கையிலேயே நிதி கணினிக் குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 24 குற்றங்கள் 2021 ஆம் ஆண்டு 577 குற்றங்கள், 2022 ஆம் ஆண்டு 654 குற்றங்கள், 2023 ஆம் ஆண்டு 472 குற்றங்கள்,2024ஆம் ஆண்டு 1,539 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.வடக்கு மாகாணத்தில் அதிகளவான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
![]()