முல்லைத்தீவுக்கு வருகையில் வடக்கு மீனவர்களைச் சந்திக்கும் ஜனாதிபதி

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார்
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கும், ஜனாதிபதிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிகமோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
வடமாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடையன. அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் பாராளுமன்றிற்கு வருகைதந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இந்த சட்டவிரோத கடற்றொழிலால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பால் கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன்.
அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன்.
இவ்வாறாக வடக்குமாகாண கடற்றொழிலாளர்களர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புகின்றனர் என்ற தகவலையும் தெரியப்படுத்தினேன்.
இந்நிலையில்,கூடியவிரையில் தான் முல்லைத்தீவிற்கு வந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.
இதுதவிர வன இலாகா, வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்கள்2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு ஆக்கிரமித்த இடங்களைப்பற்றியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் தெரிவித்தார்.
![]()