முச்சந்தி

இணைந்து செயற்படுவதற்கு தமிழரசின் நிபந்தனை என்ன?; அறிய வேண்டும் என்கின்றது ரெலோ 

இணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழரசுக் கட்சி ஒரு அழைப்பினை விடுத்திருந்தது. நாங்கள் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவர்களுடைய நிபந்தனை என்ன என்பதை அறிய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ}பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சம்பந்தமான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன . கடந்த வெள்ளிக்கிழமை தான் அந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் அதைப்பற்றி சரியாக படித்து சரியான விடயங்களை ஆராய்வதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஆகவே மீண்டும் எங்களுடைய தலைமைக்குழு இணைய வழியின் ஊடாக கூடி அந்த பட்ஜெட் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கும்.

எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு நாங்கள் பங்கேற்பது தொடர்பாக கலந்துரையாடல் எதனையும் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு அதற்கான அழைப்பு வரவும் இல்லை. அதில் நாங்கள் கலந்து கொள்வதும் சாத்தியமில்லை அத்துடன் இணைந்து செயற்படுவது தொர்பாக தமிழரசுக் கட்சி ஒரு அழைப்பினை விடுத்திருந்தது.

அதைப்பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நாங்கள் அந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவர்களுடைய நிபந்தனை என்ன என்பதை அறிய வேண்டும். நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று தமிழ் தேசிய பேரவையுடன் நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதால் அவர்களோடும் கலந்து ஆலோசிக்கவேண்டும்.

இந்த ஒற்றுமையை நாங்கள் நேசிக்கிறோம். இந்த அரவணைப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம் இதை எப்படி செயல்படுத்துவது என்பது எங்களுடைய அங்கத்துவ கட்சிகளோடு கலந்து ஆலோசித்துத்தான் அந்த முடிவை அறிவிப்பதாக இருக்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *