காதலால் இனைவோம்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

எண்ணத்தில் சிறகடிக்கும் வண்ணப்பறவை
மண்ணில் பிறந்ததற்கு மகிமை சேர்த்தாள்
தண்ணிலவு மதிமுகத்தால் மயக்குகின்றாள்
கண்ணாடி வளையொலியில் கிறங்கவைத்தே
என்னவளே என்றவுடன் அருகில் வந்தாள்
சொன்னதை ஏற்று என்னைக் காதலித்தாள்
மின்னலடித்தது போல் எதிரே வந்து நிற்பாள்
கன்னத்தில் குழிவிழ சிரித்தும் மயக்கிடுவாள்
பின்னல் சடையில் என்னையும் பின்னிட்டாள்
என்னை ஏற்றிட ஏதுள்ளது என்னிடம் என்றேன்
உம் கண்கள் என்னை ஈர்த்ததென்றாள் அவள்
அன்னத்து அழகுநடை அவளது என்றேன் நான்
மாற்றிமாற்றி புகழ்ந்தது போதுமென்ற பூவை
காற்று தென்றலாகி மேனியில் தவழ்வது போல்
ஊற்றுநீர் ஓடையாகி உருண்டோடுதல் போல்
ஏற்றிவைத்தாள் காதலெனும் தீபமதை மனதில்
நாற்றங்காலில் வளந்தது நிற்கும் நாற்றொக்க
போற்றிநிற்கும் காதலினால் வளர்ந்து நிற்க
தூற்றிடவே பலருண்டு எங்களது இனம்கண்டு
ஏற்றிடவும் சிலரிருக்க இணைந்து வாழ்வோம்!

![]()