முச்சந்தி

வடக்கு கடலில் கைது செய்யப்படும் இந்திய மீனவரை விடுவிக்கக் கூடாது

தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கும் நிலையில் அங்குள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் தூண்டுதலில் தான் தமிழக மீனவர்கள் திட்டமிட்டு எல்லை தாண்டி வருகின்றனர். இதன் மூலம் படகுகளும் மீனவர்களும் கைது செய்யப்படும் நிலையை வேண்டுமென்றே ஏற்படுத்துகின்றனர். இக் கைதுகளை வைத்து அங்கு அரசியல் செய்கின்றனர் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச உப.தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த உள்ளூர் மீனவர்களுக்கு தொழில் அனுமதிகளை வழங்குவதன் மூலமே எமது கடல் வளங்களும் கரையோர பகுதி நிலங்களையும் பாதுகாக்க முடியும்.

வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தயவு செய்து அனுமதி வழங்க வேண்டாம். தொழில் அனுமதி என்ற போர்வையில் எமது நிலங்கள் பறிபோகின்றன . இவ்வாறான செயற்பாட்டிற்கு முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு பொறுப்பான நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளர்கள் உடந்தையாக செயற்பட வேண்டாம் .

யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையின் புதிய உதவி பணிப்பாளர் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.. இதுவரை இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு பொக்கற்றுகளை நிரப்பி வடக்கு மீனவர்களையும் கடல் வளத்தையும் அழிவு நிலைக்கு இட்டுச்சென்றனர். இனிமேல் அவ்வாறான செயற்பாட்டினை கைவிட்டு சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும். மீனவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவித்து கடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால் எமது நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. எங்களது எதிர்கால சந்ததிக்கு கடல் வளத்தை பாதுகாக்க புதிய மாவட்ட உதவிப் பணிப்பாளர் மனச்சாட்சிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய இழுவைப்படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டதாக தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் கூறிவந்த நிலையில் தற்போது பருத்தித்துறை கடலில் வைத்து 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு, மன்னார் உள்ளிட்ட வடக்கு கடற்பரப்பில் இந்திய எல்லைதாண்டிய மீன்பிடி தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. இந்த விடயம் இரு நாட்டிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதால் இதற்கு ஒரு தீர்வை எட்டமுடியாத நிலை காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கும் நிலையில் அங்குள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் தூண்டுதலில் தான் திட்டமிட்டு எல்லை தாண்டி வருகின்றனர். இதன் மூலம் படகுகளும் மீனவர்களும் கைது செய்யப்படும் நிலையை வேண்டுமென்றே ஏற்படுத்துகின்றனர். இக் கைதுகளை வைத்து அங்கு அரசியல் செய்கின்றனர். கச்சதீவு மீட்பு கோஷத்தை மீண்டும் கையிலெடுத்து அரசியலாக்கி வருகின்றனர்.

வடக்கு கடலில் வைத்து கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுதலை செய்யாது தொடர்ந்தும் சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டினால் நிரந்தர சிறை என்ற நிலை ஏற்பட்டால் ஒருவரும் எங்கள் கடல்பக்கம் வரமாட்டார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *