முச்சந்தி

தையிட்டி திஸ்ஸ விகாரை அருகே போராட்டக்காரர்களும் பொலிஸாரும் முறுகல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நேற்றுப் புதன்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது.

பூரணை நாளான நேற்று மாலை தையிட்டி திஸ்ஸ விகாரையில் விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்ட நிலையிலேயே தொடர் போராட்டம் நேற்றுக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தொடர் போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் பிரசாரச் செயலாளர் ந.காண்டீபன், கட்சியின் நிதிப் பொறுப்பாளர் தீபன் திலீசன், கட்சியின் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோத விகாரையை உடனே இடித்து அகற்று!, தையிட்டி தமிழர் சொத்து, வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

விகாரைக்கு வெளியிடங்களிலிருந்து வழிபாடுகளுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் போராட்டம் நடைபெறும் வீதியைத் தவிர்த்து மறுபக்கமாகவுள்ள வீதியால் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் நேற்று மாலை அங்கும் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்துப் பலாலிப் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில் பொலிஸாருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பித் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button