முச்சந்தி

சூடானின் கொலைக் களங்கள்: எல்-ஃபாஷரில் இனப்படுகொலை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஆபிரிக்க நாடுகளில் ஏற்படும் சண்டைகளும் மோதல்களும் உலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக வராது. அப்படியே கவனத்திற்கு வந்தாலும் உலக நாடுகள் பெரிதாக அதற்குக் கவனம் செலுத்தாது என்பதும் உண்மை)

சூடானின் கொடூரமான உள்நாட்டுப் போரில் மற்றொரு பேரழிவு அத்தியாயம் அரங்கேறியுள்ளது. டார்பூரில் உள்ள எல்ஃபாஷர் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் 18 மாத காலமாக சூடானிய இராணுவ அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், மற்றொரு துணை இராணுவப் படையான (paramilitary) RSF எனப்படும் விரைவு ஆதரவுப் படை (Rapid Support Forces) அந்நகரைக் கைப்பற்றியது.

தற்போது டார்பூரில் உள்ள அனைத்து முக்கிய நகர மையங்களையும் RSF தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம், நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் ஏற்படும் சண்டைகளும் மோதல்களும் உலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக வராது. அப்படியே கவனத்திற்கு வந்தாலும் உலக நாடுகள் பெரிதாக அதற்குக் கவனம் செலுத்தாது என்பதும் உண்மை தான்.

அப்படியொரு மிக மோசான நெருக்கடி தான் இப்போது சூடானில் ஏற்பட்டுள்ளது. வட ஆபிரிக்க சூடானில் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரியும் அளவுக்கு அங்கு இனப்படுகொலை நடந்து வருகிறது.

சூடானில் உள்நாட்டுப் போர்:

நீண்டகாலமாக வட ஆப்பிரிக்க சூடானில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதில் ஆர்எஸ்எஃப் (RSF) படைகள் மிக மோசமான தாக்குதலில் இறங்கியுள்ளன. அங்குள்ள ஒரு நகரில் செய்மதி படங்களிலேயே தெரியும் அளவுக்கு மிக கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது.

அங்கு பிணக்குவியல்களும் ரத்தக் கறையும் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. இருப்பினும், உலக நாடுகள் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 26, 2025 அன்று சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF), சூடானின் டார்பூரில் உள்ள எல்-ஃபாஷரின் (El Fasher) தெருக்களில் ஆயுதங்களை ஏந்தி கொண்டாடுவதைக் காட்டுகிறது. எல் ஃபாஷர் நகரில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் கோரமான கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த செய்மதி படங்களில் மனிதச் சடலங்களைப் போல இருக்கும் குவியல்கள் பல இருக்கின்றன.

அதேபோல மற்றொரு இடத்தில் மிக பெரியளவுக்குச் சிவப்பு நிறத்தில் ரத்தம் இருப்பதும் தெரிகிறது. ஆர்எஸ்எஃப் இந்த நகரை ஆக்கிரமித்த பின்னர் எந்தளவுக்கு மிக மோசமான அடக்குமுறை அரங்கேறியுள்ளது என்பதற்கு ஆதாரமாக இது பார்க்கப்படுகிறது.

சூடான் எல்-ஃபாஷர் படுகொலை:

சூடானின் எல்-ஃபாஷரில் RSF படைகள் குறைந்தது 3500 பேரைக் கொன்றுள்ளமை ஒரு கோரமான ஒரு இனப்படுகொலை என கருதப்படுகிறது.
மேலும் எல்-ஃபாஷரில் துணை ராணுவப் படைகளால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கூடுதல் சான்றுகள் வெளிவருவதால் பிராந்திய நாடுகள் எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றன.

சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள எல்-ஃபாஷர் நகரத்தை சமீபத்தில் கைப்பற்றியபோது, விரைவான ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் கட்டுப்பாட்டிற்காக சூடானின் இராணுவத்துடன் இணைந்து RSF படைகள், பொதுமக்கள் முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து வெளியேற முயன்றபோது குறைந்தது 1,500 பேரைக் கொன்றதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் குழு, இந்நிலைமையை கோரமான இனப்படுகொலை என்று விவரித்துள்ளது.

இன்றைய சூடானில் நிகழும் படுகொலைகள், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எல்-ஃபாஷரில் நடந்தவற்றின் நீட்சியாகும். அப்போது குண்டுவீச்சு, பட்டினி மற்றும் நீதிக்கு புறம்பான மரணதண்டனைகள் மூலம் 14,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் யேலின் மனிதாபிமான ஆராய்ச்சி ஆய்வகம் (HRL) மூலோபாயப் பகுதியில் நடந்த படுகொலைகளுக்கான புதிய சான்றுகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது. பொதுமக்கள் இடம்பெயர்ந்த பிறகு எடுக்கப்பட்ட எல்-ஃபாஷரின் செயற்கைக்கோள் படங்கள், மனித உடல்களின் அளவிற்கு ஒத்த பொருட்களின் கொத்துக்களையும், தரையில் சிவப்பு நிறமாற்றத்தின் பெரிய பகுதிகளையும் செய்மதி படங்கள் காட்டுகின்றன.

குதிரைகளில் வரும் பிசாசுகள்:

ஆர்எஸ்எஃப் படைகள் திட்டமிட்டு இந்தக் கொடூரத்தை அரங்கேறியுள்ளனர். அப்பகுதியில் பொதுமக்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் வெளியே வர முடியாத வகையில் தெருக்களைச் சுற்றி வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அப்பாவி மக்கள் இதனால் வேறு வழியில்லாமல் வெளியே வந்தபோது அவர்களைச் சுட்டுத் தள்ளியுள்ளனர். தப்பிக்க முயன்றோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பிணக் குவியல்களே அங்கு இருக்கிறது. மேலும், அருகிலேயே ரத்தம் சிதறி சிவப்பு நிற கறைகளும் தெரிகிறது. கடந்த 2023 ஏப்ரல் மாதம் சூடான் ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் ஆர்எஸ்எஃப் அமைப்பின் தளபதி முகமது ஹம்டன் டகாலோ இடையே இந்த மோதல் தொடங்கியது. அதன் பிறகு அதிரடி தாக்குதலை ஆரம்பித்த ஆர்எஸ்எஃப் படைகள் சூடான் ஆயுதப் படையின் ராணுவத் தளங்களைத் தன்வசப்படுத்தியது.

இரு தரப்புமே போர்க் குற்றங்களைச் செய்துள்ளன. இருப்பினும் ஆர்எஸ்எஃப் படைகள் கொடூரமான செயல்களைச் செய்துள்ளன. உண்மையில் இந்த தாக்குதல்களில் 2020 முதலே இதுபோன்ற கொடூரங்களை நடத்தி வருகிறார்கள்.

அப்போது திடீரென ஒரு பகுதிக்குள் குதிரைகளில் வரும் இந்த படை வீரர்கள், ஆண்களைக் கொன்றுவிடுவார்கள். பெண்களைப் பலாத்காரம் செய்வார்கள். இதனால் உள்ளூர் மக்கள் “குதிரைகளில் வரும் பிசாசுகள்” என்றே இவர்களை அழைப்பார்களாம்.

இப்போது குதிரைகளுக்குப் பதிலாக வாகனங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தினாலும், இவர்களின் தாக்குதல் யுக்தி மாறவில்லை. இன ரீதியாகக் குறிவைத்து அரபு சமூகங்களைச் சேராதவர்களைத் தாக்குவார்கள். அரபு பெண்களை தவிர்த்து மற்ற பெண்களைப் பலாத்காரம் செய்வார்கள். பலாத்காரத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவலமான செயலையும் இந்த அமைப்பு செய்கிறது. ஏன் என்றால் அரபு குழந்தைகளை உருவாக்குகிறோம் என்று சொல்வார்களாம்.

சூடான் இராணுவம் – RSF:

2023 முதல் சூடானின் இராணுவம், RSF ஒரு இரத்தக்களரி மிகுந்த உள்நாட்டுப் போரில் பங்கேற்று வருகிறது. இது பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர வைத்துள்ளது.

டார்பூரில் இராணுவத்தின் கடைசி கோட்டையான எல்-ஃபாஷரை 17 மாத முற்றுகைக்குப் பிறகு துணை ராணுவப் படை கைப்பற்றியது. அன்றிலிருந்து சூடான் அரசாங்கம் நகரத்தில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியது, அதே நேரத்தில் மரணதண்டனைகள், தப்பிக்கும் வழிகளில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வீடு வீடாகச் செல்லும் சோதனைகள் உள்ளிட்ட அட்டூழியங்கள் குறித்த நம்பகமான அறிக்கைகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பல நகரத்திலும் பதிவாகியுள்ளன.எல்-ஃபாஷர் நகர வீழ்ச்சி, டார்பூரின் பரந்த பகுதியை RSF முழுமையாகக் கட்டுப்படுத்தி உள்ளது.

மேலும் தெற்கு சூடான் உருவாக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், சூடானின் மற்றொரு பிளவு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

எல்-ஃபாஷர் நகரில் உள்ள சவுதி மருத்துவமனை என அடையாளம் காணப்பட்ட பகுதி வழியாக போராளிகள் சுற்றித் திரிந்து நோயாளிகளை தூக்கிலிடும் காட்சிதான் சமீபத்திய மற்றும் மிகவும் தொந்தரவான வீடியோ என்று கூறப்படுகிறது.

நகரத்தை விட்டு வெளியேறிய உயிர் பிழைத்தவர்கள் குறைந்தது 500 பேர் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்ததாகக் கூறினர். கொல்லப்பட்டவர்களில் சுகாதார ஊழியர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய அரசுகளின் எச்சரிக்கை:

சவுதி அரேபிய அரசின் மகப்பேறு மருத்துவமனையில் 460 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

சவூதி அரேபியா, எகிப்து, கட்டார், துருக்கி, ஜோர்டான் ஆகியவை சூடானில் RSF ஆல் செய்யப்பட்ட துஷ்பிரயோகங்களை எதிர்த்து கடுமையாக கண்டித்துள்ளன.

சவூதி அரேபியா கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததுடன், பொதுமக்களைப் பாதுகாக்க RSF ஐ வலியுறுத்தியது. எகிப்து உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது மற்றும் சூடான் நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தது.

எல்-ஃபாஷரில் விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும், மனிதாபிமான உதவிகளுக்கு பாதுகாப்பான பாதையை அமைக்கவும் துருக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து, அமைதியான தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

கட்டார் அரசு கொடூரமான மீறல்களை கண்டித்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்து, துருக்கி, கட்டார் ஆகியவை சூடானின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தின.

மேலும் ஜோர்டானும் வன்முறையைக் கண்டித்தது மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க நிதானத்தையும் அவசர போர்நிறுத்தத்தையும் கோரியுள்ளது.

2000களில் டார்பர் மோதலின் போது இனப்படுகொலையை நடத்திய ஜன்ஜாவீத் என்று அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய மோசமான போராளிக் குழுவிலிருந்து துணை ராணுவப் படை வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button